கருங்குழி பேரூராட்சியில் புதிதாக 4 குளங்கள் உருவாக்கம்: பேரூராட்சிகள் ஆணையர் ஆய்வு

மதுராந்தகம்: கருங்குழி பேரூராட்சியில் புதிதாக 4 குளங்கள் உருவாக்கப்பட்டதாக தினகரன் நாளிதழில் செய்தி வெளியானதையொட்டி, அதனை பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ் நேரில் ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சியில் புதிதாக நான்கு குளங்கள் உருவாக்கம் என்ற தலைப்பில் கடந்த 22ம் தேதி செய்தி தினகரன் நாளிதழில் வெளியானது. இதன்மூலமாக இப்பகுதி பொதுமக்களுக்கும் கால்நடைகளுக்கும் போதிய நீர் ஆதாரம் கிடைத்துள்ளது என்பது குறித்தும் விரிவாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த குளங்களை பேரூராட்சிகளின் ஆணையர் ஆர்.செல்வராஜ் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது, பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 4 இடங்களில் அரசு நிலங்களில் புதிதாக வெட்டப்பட்ட குளங்களை பார்வையிட்டார். மேலும், இந்த குளங்களின் மூலமாக கிடைக்கப்பெறும் பயன்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதுபோன்ற, நீர் ஆதாரம் பெருக்கும் நடவடிக்கைகளை பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இங்கு நடைபெறும் நமக்கு நாமே திட்ட பணிகள், கழிவறை பராமரிப்பு பணிகள், சமுதாயக்கூட பயன்பாடுகள் ஆகியவற்றை பார்வையிட்டார். அப்போது, பேரூராட்சி தலைவர் ஜி.தசரதன், துணை தலைவர் சங்கீதா சங்கர், செயல் அலுவலர் மா.கேசவன்  உள்பட பலர் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து பேரூராட்சி தலைவர் சார்பில் பேரூராட்சியின் குறிப்பிட்டப் சில பகுதிகளில் தார் சாலை மற்றும் கால்வாய்கள் அமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. அவரும் மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Related Stories: