2011ல் ஆட்சி மாற்றத்தால் பொலிவிழந்த பையனூர் திரைப்பட நகரம் மீண்டும் புதுப்பொலிவு பெறுமா? சினிமா துறையினர் எதிர்ப்பார்ப்பு

திருப்போரூர்: திருப்போரூர் அருகே பையனூரில் 2011ல் ஆட்சி மாற்றத்தால் பொலிவிழந்த, திரைப்பட நகரை மீண்டும் புது பொதுபொலிவு பெறும்வகையில் சீரமைக்கவேண்டும் என சினிமா துறையினர் எதிர்ப்பார்த்து காத்துதிருக்கின்றனர். திரைப்பட துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும், சின்னத்திரையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் சென்னை அருகே பையனூரில் குடியிருப்பு, ஸ்டுடியோ, திரையரங்கம், தொழில்நுட்ப வளாகம் ஆகியவற்றை அமைக்க கடந்த 2008ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது 99 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து அந்த இடத்தில் கலைஞர் திரைப்பட நகரம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டு ஸ்டுடியோ, திரையரங்கம், திரைப்பட கலைஞர்கள், எடிட்டர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள், அடிப்படை ஊழியர்கள், துணை நடிகர்களுக்கு என குடியிருப்புகள் போன்றவை உருவாக்கப்பட்டது. முதற்கட்டமாக, பல்ேவறு பிரிவுகளில் 6000 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டு மலேசியாவை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சி உருவானதும் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதால் அனைத்து பணிகளும் முடக்கப்பட்டன. இதன் காரணமாக 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை பையனூர் சினிமா நகரம் மர்ம தேசம் போல் காட்சி அளித்தது.

இந்நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வரானவுடன் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அவரை சந்தித்து பையனூர் சினிமா நகரத்தை மீண்டும் புதுப்பொலிவுடன் உருவாக்க உதவ கோரிக்கை விடுக்கப்பட்டது.இதை தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு பையனூர் சினிமா நகரப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு ஸ்டுடியோ கட்டுமானப்பணி ஓரளவுக்கு முடிக்கப்பட்டு முதல் ஸ்டுடியோவுக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்பட்டு திறக்கப்பட்டது. அந்த விழாவில், ஜெயலலிதா பெயரில் மற்றொரு ஸ்டுடியோ அமைத்தால் அதற்கு தமிழக அரசு சார்பில், ரூ.5 கோடி வழங்கப்படும். 2020ம் ஆண்டிற்குள் பையனூரில் திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசினர். ஆனால், இந்த ஸ்டுடியோ திறப்பு விழாவின் மறுநாள் முதல் இந்த திரைப்பட நகரத்திற்குள் ஒருவரும் எட்டிப் பார்க்கக்கூட இல்லை. இதன் காரணமாக பையனூர் திரைப்பட நகரம் பொலிவிழந்து காணப்படுகிறது.

அங்கு கட்டப்பட்டு உள்ள 2 ஸ்டுடியோக்களில் மட்டும் அவ்வப்போது ஒரு சில சின்னத்திரை தொடர்கள் படம் பிடிக்கப்படுகின்றன. ஆனால், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா நடிகர்கள், தொழில்நுட்ப பிரிவினர், சின்ன திரை கலைஞர்களுக்கான குடியிருப்பு பணிகள், பயிற்சி அரங்கங்கள், மனைப்பிரிவுகள் போன்றவை எதுவும் தொடங்கப்படவே இல்லை. வங்கியில் கடன் பெறுவதில் ஏற்பட்ட நிர்வாக சிக்கல் காரணமாக இந்த குடியிருப்புகள் தொடங்கப்படவில்லை என்று ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

சென்னைக்கு மிக அருகில் நல்ல நோக்கத்தில் தொடங்கப்பட்ட ஒரு திரைப்பட நகரம் நிர்வாக சிக்கலின் காரணமாக அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாமல் தவிப்பதால் இந்த இடத்தில் வீடு கிடைத்து குடியேறி விடலாம் என்ற கனவுடன் தொடக்க விழாவிற்கு வந்த திரைப்பட தொழிலாளர்கள் அவ்வப்போது ஏக்கத்துடன் வந்து இந்த இடத்தை பார்த்து செல்கின்றனர். திமுக அரசு திரைப்படத் துறையில் ஏற்பட்டுள்ள இந்த தேக்க நிலையை போக்கி பையனூர் கலைஞர் திரைப்பட நகரத்தை மீண்டும் செயல்படுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று திரைத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

* பல்வேறு கனவுகளுடன் தொடக்க விழாவிற்கு வந்த, திரைப்பட தொழிலாளர்கள் ஏக்கத்துடன் வந்து இந்த இடத்தை பார்த்து செல்கின்றனர்.

* சென்னைக்கு அருகே நல்ல நோக்கத்தில் தொடங்கப்பட்ட திரைப்பட நகரம் நிர்வாக சிக்கல் காரணமாக அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாமல் தவிக்கிறது.

Related Stories: