ஊருக்கு மட்டுமே உபதேசம் செய்யும் ஐரோப்பிய நாடுகள் மீண்டும் அழிவுப்பாதை: கைவிடப்பட்ட பருவநிலை கொள்கை; திறக்கப்படும் நிலக்கரி சுரங்கங்கள்

ஜெர்மனியின் கடைசி நிலக்கரிச் சரங்கமான பிராஸ்பர் ஹேனியல் சுரங்கம் மூடப்பட்டு, அதில் இருந்து எடுக்கப்பட்ட கடைசி துண்டு நிலக்கரியை, ஜெர்மன் அதிபர் பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையரிடம் சுரங்கத்தொழிலாளர்கள் கண் கலங்க ஒப்படைத்தனர். ஏறக்குறைய 155 ஆண்டு கால இயக்கத்தை அன்றோடு நிறுத்திக் கொண்டது அந்த சுரங்கம். அன்றைய தினம் தொழிலாளர்கள் மத்தியில் பேசிய சுரங்க தலைவர், ‘‘சிலருக்கு வேண்டுமானால் இது வெறும் கல்லாக இருக்கலாம். ஆனால், உங்களுக்கு, நமது வரலாற்றின் முக்கியத்துவதை வெளிப்படுத்தும் ஒரு குறியீடு என்றுதான் கூற வேண்டும். ஏனெனில், நமக்கு இதுதான் உலகம்’’ என்று உருக்கமாக குறிப்பிட்டார்.

இது நடந்தது, 2018 டிசம்பர் 21ம் தேதி. பசுமை இல்ல வாயுக்கள் எனக் கூறப்படும், கார்பன் டை ஆக்சைடு போன்ற பசுமை இல்ல வாயுக்கள் வெளிப்படுவதை தடுப்பது இதற்கான முக்கிய காரணமாக அமைந்தது. ஏனெனில், அதற்கு ஒரு மாதம் முன்புதான் பசுமை இல்ல வாயுக்கள் அதிகரிப்பது, நிச்சயமாக அழிவுப்பாதையை நோக்கித்தான் இட்டுச் செல்லும் என ஐநா எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், ஜெர்மனி மட்டுமல்ல, ஆஸ்திரியா, இத்தாலி, நெதர்லாந்து ஆகியவையும் நிலக்கரி பயன்பாட்டுக்கு திரும்பியுள்ளன. அதாவது, ஒரு காலத்தில் நிலக்கரியால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றியும், இது ‘அழிவுப்பாதை’ என உலக நாடுகளுக்கு பாடம் எடுத்த ஐரோப்பிய நாடுகள் எல்லாம், இன்று அதே பாதையில் பயணிக்க தலைப்பட்டிருக்கின்றன.

ஜெர்மனி, நெதர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி நாடுகளில் மூடப்பட்ட பழைய நிலக்கரி சுரங்கங்கள், மீண்டும் இயக்கப்படுவதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பு அந்நாட்டு அரசுகளின் திட்டமல்ல. ஏனெனில், நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலும், ஜெர்மன் தலைநகர் பெர்லினிலும் பருவநிலை மாற்றம் தொடர்பான கொள்கைகள் அமலில் உள்ளன. 2038க்குள் நிலக்கரி பயன்பாட்டையே முற்றிலுமாக நிறுத்த வேண்டு்ம என, 2020ம் ஆண்டிலேயே ஜெர்மன் நாடாளுமன்றம் சட்டம் நிறைவேற்றியுள்ளது. எனவே, நிலக்கரி உற்பத்தி முடிவு, இதற்கு எதிரான நிலைப்பாடாக உள்ளது.

ரஷ்யாவில் இருந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இயற்கை எரிவாயு சப்ளை குறைந்ததே இதற்கு முக்கிய காரணம். இதனால், இயற்கை எரிவாயு விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. இதைத்தொடர்ந்து, ‘‘இயற்கை எரிவாயு பயன்பாட்டை மின் உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்’’ என, ஜெர்மனி பொருளாதார அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். கடந்த நவம்பர் இறுதியிலேயே, 90 சதவீதம் அளவுக்கு காஸ் இருப்பை வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கையை இந்த ஜெர்மன் அரசு எடுத்து விட்டது. ஆனால் தற்போது இருப்பு, மொத்த கொள்ளளவில் சுமார் 56.7 சதவீதம்தான்.

ஜெர்மனியை பொருத்தவரை கடந்த 2005ம் ஆண்டில் நிலக்கரியில் இருப்பு 61.7 மில்லியன் டன்களாக இருந்தது. இது கடந்த ஆண்டில் 35.9 மில்லியன் டன்களாக குறைந்து விட்டது. அதேநேரத்தில், காஸ் 111.3 மில்லியன் டன்களில் இருந்து 111.2 மில்லியன் டன்களாகி விட்டது. அதாவது, 15 ஆண்டுகள் கடந்தும் பெரிய அளவில் மாற்றம் இல்லை. இதுபோல், 2005ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் லிக்னைட் 54.4 மில்லியன் டன்களில் இருந்து 38.6 மில்லியன் டன்களாக குறைந்துள்ளது. தற்போது, ரஷ்யாவில் இருந்து இயற்கை எரிவாயு 60 சதவீதம் தடைபட்டதற்கே, மிகப்பெரிய இடர்பாட்டை ஜெர்மனி சந்தித்துள்ளது.  

கடந்த ஆண்டில் லிக்னைட் மற்றும் நிலக்கரி மூலம் மொத்த தேவையில் 28 சதவீத மின்சாரத்தை ஜெர்மனி தயாரித்துள்ளது. இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி 15.4 சதவீதமும் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது., புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் 41 சதவீதமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக, அந்நாட்டின்  எரிசக்தி துறை தெரிவித்துள்ளது. கடந்த மே மாத முடிவில், ஜெர்மனி நிலக்கரி மூலம் 31.4 கிகா வாட், காஸ் மூலம் 27.9 கிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளதாக, அந்நாட்டின் ஒழுங்குமுறை ஆணைய புள்ளி விவரம் தெரிவிக்கிறது. ஜெர்மனியை தொடர்ந்து ஆஸ்திரியாவும் அனல் மின் நிலையங்களை மீண்டும் இயக்கத்துவங்கியுள்ளன.

இதுபோல், நெதர்லாந்தும் அனல் மின் நிலையங்கள் செயல்படுவதற்கான அனைத்து தடைகளையும் உடனடியாக விலக்கிக் கொண்டு விட்டது. இந்த நாடுகள் எல்லாம், நாட்டின் ஒட்டு மொத்த மின் உற்பத்தியில் 3ல் ஒரு பங்கு மட்டுமே நிலக்கரியை கொண்டு தயாரித்து வந்தன.   இதற்கு அடுத்ததாக இத்தாலி நாட்டிலும், மூடப்பட்ட பழைய அனல் மின் நிலையங்களை இயக்குவதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கியுள்ளது. கடும் மின் தட்டுப்பாடு ஏற்படுவதற்குள் இவற்றை அவசர கதியில் செயல்படுத்த முனைப்புக் காட்ட உள்ளதாக, அந்நாட்டின் எரிசக்தி துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேற்கண்ட நாடுகள் திடீரென தங்கள் பருவநிலை மாற்ற கொள்கைகளை கைவிட்ட,  நிலக்கரி பயன்பாட்டை அதிகரித்துள்ளது, சுற்றுச்சூழல் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா வோன் டெர் லெயன், ‘‘ஐரோப்பிய நாடுகள் மீண்டும் நிலக்கரி பயன்பாட்டுக்கு மாற வேண்டாம். மாறாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் அதிக முதலீடுகளை  மேற்கொள்ள வேண்டும். தற்போதைய இடர்பாடான சூழ்நிலையில், நாம் முன்னோக்கி பயணிக்க வேண்டுமே தவிர, மாசுபடுத்தும் நிலக்கரி பயன்பாட்டுக்கு திரும்புவது சரியல்ல’’ என எச்சரிக்கை விடுத்திருந்தார். சர்வதேச எரிசக்தி முகமையின் சமீபத்திய அறிக்கையில், எரிபொருள் துறையில் சுமார் ரூ.190 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் மேற்கொள்ள வேண்டும். இதில், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு கணிசமாக செலவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ரஷ்யா 60 சதவீதம் அளவுக்கு காஸ் சப்ளையை குறைத்ததற்கே ஐரோப்பிய நாடுகள் விழி பிதுங்க தொடங்கி விட்டன.

தேவையான முன்னேற்பாடுகள் இல்லாதது, சுற்றுச்சூழல் மாசுபாடு இல்லாத எரிசக்தி உற்பத்தியை செயல்பாட்டுக்கு கொண்டு வராதது, அணுமின் நிலையங்களை படிப்படியாக மூடியது போன்றவைதான், ஐரோப்பிய நாடுகளை தற்போதைய இக்கட்டான நிலைக்கு கொண்டு வந்துவிட்டன என்கின்றனர் நிபுணர்கள். இதனால்தான் எந்த முன்னேற்பாடும் செய்யாமல், பருவநிலை கொள்கை குறித்து ஊருக்கு உபதேசம் செய்த ஐரோப்பிய நாடுகள், நிலக்கரி பயன்படுத்தும் பிற நாடுகளை ‘அழிவுப்பாதை’யை பயன்படுத்துவதாக வர்ணித்தன. ஆனால், காலத்துக்கு ஏற்ப மாறாத  அவை, அதே  அழிவுப்பாதையில் தற்போது பயணிக்க துவங்கியுள்ளன. இது அழிவின் ஆரம்பமா? தற்காலிக தீர்வா என்பதை அந்த நாடுகளின் அடுத்த நடவடிக்கைகளும் ஆயத்த ஏற்பாடுகளும்தான்தீர்மானம் செய்யும்.

* ஜெர்மனியின் எரிபொருள் நுகர்வு

(2005ம் ஆண்டுடன் ஒப்பீடு)

ஜெர்மனியின் மொத்த எரிபொருள் நுகர்வில் இயற்கை எரிவாயுவின் பங்களிப்பு 27 சதவீதமாக உள்ளது. இவற்றில் பெரும்பான்மையாக தொழில்துறை பயன்பாட்டுக்குதான் பயன்படுத்தப்படுகிறது. மிகக்குறைவாக, அதாவது 15 சதவீதம் அளவுக்கு மட்டுமே மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது என ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

(கோடி டன்களில்)

    ஆண்டு    ஆண்டு

எரிபொருள்    2005    2021

மினரல் ஆயில்    17.63    13.23    

காஸ்    11.13    11.12    

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி    26.3    66.9

லிக்னைட்    54.4    38.6

நிலக்கரி    61.7    35.9

அணுசக்தி      7.2    8

நிலக்கரி உற்பத்தி

டாப் 10 நாடுகள்

நாடு    உற்பத்தி

(கோடி டன்களில்)

சீனா    358

இந்தியா    71.61

இந்தோனேஷியா    50.37

அமெரிக்கா    44.1

ஆஸ்திரேலியா    42.59

ரஷ்யா    32.77

தெ.ஆப்ரிக்கா    25.22

கஜகஸ்தான்    10.79

போலந்து    5.44

கொலம்பியா    4.93

* பராமரிப்பு பணியா? போர் காரணமா? கனடாவின் தடையா?

ரஷ்யா அரசுக்கு சொந்தமான மிகப்பெரிய காஸ் உற்பத்தி  நிறுவனமான காஸ்புரோம், பைப்லைன் பழுது மற்றும் பராமரிப்பு பணியால்தான் காஸ் சப்ளை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால், உக்ரைன்-ரஷ்யா போரின் விளைவுதான் என அழுத்தம் திருத்தமாக நம்புகின்றன, காஸ் சப்ளை பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகள். மேற்கண்ட நார்டு ஸ்டிரீம் 1 என்ற பைப்லைன் ரஷ்யாவில் இருந்து பால்டிக் கடல் வழியாக ஜெர்மனிக்கு செல்கிறது. ரஷ்யா மீது கனடா விதித்துள்ள பொருளாதார தடையால்தான், அந்த நாட்டில் இருந்து  ஜெர்மனிக்கு எரிவாயு சப்ளை குறைக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. ஏனெனில், கனடாவின் மான்ட்ரியலில் உள்ள சீமென்ஸ் எனர்ஜிதான் மேற்கண்ட பைப்லைனை பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

* நிலக்கரி கையிருப்பு

கடந்த 2020ம் ஆண்டு புள்ளி விவரத்தின்படி, உலக அளவிலான நிலக்கரி கையிருப்பு 1,07,400 கோடி டன்களாக இருந்தது. இதில் நாடுகளின் பங்களிப்பை பொறுத்தவரை அமெரிக்கா 23 சதவீதம், ரஷ்யா 15 சதவீதம், ஆஸ்திரேலியா 14 சதவீதம் மற்றும் சீனா 13 சதவீதம் வைத்திருந்தன.

* அரசு உத்தரவாதத்துடன் காஸ் இருப்பு வசதியை அதிகரிக்க கடன் வசதி

இயற்கை எரிவாயுவை போதுமான அளவுக்கு இருப்பு வைப்பதற்கான வசதிகளை அதிகரிக்க ஜெர்மன் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இயற்கை எரிவாயு சப்ளை செய்யும் ஏஜென்சிகள் இந்த வசதிகளை ஏற்படுத்துவதற்காக வாங்கப்படும் கடன்களுக்கு அரசு உத்தரவாதம் அளிக்கும் என நிதியமைச்சகம் உறுதி அளித்துள்ளது. குளிர்கால தேவைக்காக காஸ் இருப்பு வைப்பதற்கு ஜெர்மனி தீவிரம் காட்டி வருகிறது. கடந்த ஜூன் மத்தியில், மொத்த கொள்ளளவில் 56சதவீதம் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. நவம்பரில் குறைந்த பட்சம் 90 சதவீதம் இருப்பு வைக்குமாறும், பிப்ரவரியில் இந்த இருப்பு குறைந்த பட்சம் 40 சதவீதமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

* அதிகரித்த காஸ் விலை

ரஷ்யாவில் இருந்து இயற்கை எரிவாயு சப்ளை குறைந்ததால், சர்வதேச சந்தையில் காஸ் விலை திடீரென உயர்ந்தது. டச்சு ஊக வணிகத்தில் காஸ், ஒரு மெகாவாட்டுக்கு 130 டாலர்கள்  (ரூ.10,000) உயர்ந்தது. இது முந்தைய ஆண்டு விலையுடன் ஒப்பிடுகையில் 5 மடங்கு அதிகரிப்பாகும்.

* அணுசக்தியை கைவிட்டதால் வந்த ஆபத்து

கடந்த 2011 மார்ச் வரை ஜெர்மனியில் 17 அணுமின்நிலையங்கள் மூலம் அந்நாட்டு தேவையில் 4ல் ஒரு பங்கு மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. 1998ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாறியதும், அணுமின் நிலையங்களை படிப்படியாக மூடுவதற்கான கொள்கை முடிவு எடுத்தது. இதற்கான சட்டமும் வரையறுக்கப்பட்டது. ஜப்பானில் புகுஷிமா அணு உலையால் ஏற்பட்ட  பேரழிவுக்கு பிறகு, ஏஞ்சலா மெர்கெல் தலைமையிலான அரசு கடந்த மார்ச் 2011ல் இந்த முடிவை எடுத்தது. இதன்படி, ஜெர்மனியின் கடைசி அணு உலை நடப்பு ஆண்டு டிசம்பருக்குள் தனது இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும்.

* போலந்து நிலை என்ன?

ஐரோப்பிய யூனியன் நாடுகளில், மிக அதிகமாக நிலக்கரியை சார்ந்துள்ள நாடு போலந்துதான். இந்த நாட்டின் காற்றாலை மின் உற்பத்தி சமீப ஆண்டுகளாக ஸ்தம்பித்து விட்டது. ஆனால், பால்டிக் கடலோர பகுதியில் காற்றாலையை நிறுவுவதற்கான பணிகளில் இந்த நாடு தீவிரம் காட்டி வருகிறது. இதுபோல், வீடுகளில் சூரிய ஒளி மின்சக்தியை அதிகரிக்கவும் இந்த நாடு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. ஆனால், ஏப்ரலில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய விதிமுறைகள் இதற்கு முட்டுக்கட்டையாக அமைந்து விட்டது. அதேநேரத்தில், கடந்த 19ம் தேதி சாதனை அளவாக, இந்த நாட்டின் மின் உற்பத்தியில் 67 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அன்றையதினம் நிலக்கரி பயன்பாடு வெகுவாக குறைந்து விட்டது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் கடந்த 2010ம் ஆண்டில் 6.9 சதவீதம் மின் உற்பத்தி செய்த போலந்து, கடந்த ஆண்டில் இதனை 16.9 சதவீதமாக மட்டுமே அதிகரித்துள்ளது. எனினும், அந்நாட்டின் மின்தேவைக்கு இதுவே போதுமானதுதான் என்கின்றனர்.

* தற்காலிக மாற்று வழி எல்என்ஜி

ரஷ்யாவின் இயற்கை எரிவாயுவை சார்ந்திருப்பதில் இருந்து தப்பிக்க, திரவ எரிவாயுவுக்கு (எல்என்ஜி) மாறுவதே சிறந்த வழி என கருதப்படுகிறது. இது குறித்து எரிசக்தி ஆய்வு நிறுவனம் ஒன்று கூறுகையில், ‘‘எல்என்ஜி பயன்பாட்டுக்கு மாறினால் ரஷ்யாவை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்படாது. தற்காலிக தீர்வாகவும் அமையும். சுற்றுச்சூழலும் மாசுபடாது.  உதாரணமாக, எல்என்ஜிக்கு மாறாமல் நிலக்கரியை மட்டுமே ஜெர்மனி சார்ந்திருந்தால், 2045க்குள் 30 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு இதன்மூலம் உருவாகும் அபாயம் உள்ளது என எச்சரித்துள்ளது. அல்லது, 2035க்குள் நிலக்கரி பயன்பாட்டில் இருந்து விடுபட வேண்டுமானால் ஆண்டுக்கு 10 சதவீதம் வீதம் சூரிய மின்சக்தி அல்லது காற்றாலை மின்உற்பத்திக்கு மாற வேண்டும் என இந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

Related Stories: