விக்ராந்த் ரோணாவில் புதிய உலகம்: கிச்சா சுதீப் தகவல்

சென்னை: அனூப் பண்டாரி இயக்கத்தில் கிச்சா சுதீப் நடித்துள்ள 3டி படம், ‘விக்ராந்த் ரோணா’. கன்னடம், இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் உள்பட பல மொழிகளில், வரும் ஜூலை 28ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் தமிழ் பதிப்புக்கான செய்தியாளர்கள் சந்திப்பில் கிச்சா சுதீப் பேசியதாவது: ‘கே.ஜி.எஃப் 2’ படத்துக்கு பிறகு கன்னட சினிமாவுக்கு மிகப்பெரிய மரியாதை கிடைத்துள்ளதை நான் எப்படி பார்க்கிறேன் என்று கேட்கிறீர்கள். ஒரு ஊரிலுள்ள கோயிலுக்கு சென்று வந்த ஒருவர், அந்த கோயிலில் வேண்டியதால் நான் நினைத்தது கிடைத்தது என்று சொன்னால், உடனே அந்த கோயிலின் மீது மரியாதை கூடும்.

ஆனால், அந்த கோயில் நீண்ட காலமாக அங்குதான் இருக்கிறது. எனவே, அது அந்த கோயில் மீது குற்றம் இல்லை. நீங்கள் அந்த கோயிலுக்கு தாமதமாக மரியாதை கொடுக்க ஆரம்பித்து இருக்கிறீர்கள், அவ்வளவுதான். அந்த கோயில் எப்போதுமே தனது சிறப்பை கொண்டிருந்தது. நீங்கள் அதுபற்றி தாமதமாக கேள்விப்பட்டு இருக்கிறீர்கள். எல்லாவற்றுக்கும் ஒரு நல்ல நேரம் வர வேண்டும் அல்லவா? தற்போது கன்னட சினிமாவுக்கு கிடைத்துள்ள மரியாதையை அப்படித்தான் பார்க்கிறேன்.

சினிமா மீது எனக்கு எப்போதுமே நம்பிக்கை உண்டு. அது எல்லா இடங்களுக்கும் அழைத்து செல்லும். அதுதான் இப்போது எங்களை இங்கே அழைத்து வந்திருக்கிறது. இந்த படம் உருவாக என் வாழ்க்கை எனக்கு இன்ஸ்பிரேஷன் கொடுத்தது. கடந்த 4 வருடங்களாக இப்படத்தை 3டியில் உருவாக்க காரணம், இப்படத்தில் மிகப்பெரிய ஒரு உலகத்தை நாங்கள் படைத்துள்ளோம். அதற்குள் பார்வையாளர்களை அழைத்து வருவதுதான் எங்கள் நோக்கம். இதையடுத்து நான் நடிக்கும் ‘பில்லா ரங்கா பாட்ஷா’ என்ற படத்தையும் அனூப் பண்டாரி இயக்குகிறார்.

Related Stories: