அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழின் நிறுவனர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் பெயர் நீக்கம்

சென்னை: அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழில் ஓ.பன்னீர்செல்வம் நிறுவனர் என்று குறிப்பிட்டு வெளியாகி வந்தது. இந்நிலையில், அதன் முகப்பு பக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. ஒற்றைத் தலைமை என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்ற வகையில் நீதிமன்றம் வரை சென்று அதனை முறியடித்தார். இதனால், எடப்பாடி தரப்பு கடும் அதிர்ச்சியடைந்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படாததால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகி விட்டது என்றும் அறிவித்தனர். அதே நேரத்தில் வருகிற 11ம் தேதி அதிமுக பொதுக்குழு மீண்டும் கூட்டப்படும். அதில் ஒற்றைத் தலைமை குறித்து முடிவு செய்யப்படும் என்று எடப்பாடி தரப்பில்  அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி கூடும் பட்சத்தில் அது சட்டப்படி செல்லாது என்றும் ஓபிஎஸ் தரப்பில் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழின் நிறுவனர் பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் தற்போது நீக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை வெளிவந்த நாளிதழில் நிறுவனர்களாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால், நேற்று வெளிவந்த நாளிதழில் நிறுவனர் எடப்பாடி பழனிசாமி என்று மட்டுமே வந்துள்ளது. ஓபிஎஸ் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழில்தான் அதிமுகவின் புதிதாக நிர்வாகிகள் நியமனம், நீக்கம் தொடர்பான அறிவிப்புகள் முதலில் வெளியிடப்படுவது வழக்கம். தற்போது அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் எடப்பாடியின் கட்டுப்பாட்டில் சென்றுள்ளதால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் தொண்டர்களிடையே ஒருவித குழப்பமும் உருவாகியுள்ளது.

Related Stories: