40க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பு குரங்கம்மை அவசர நிலை இப்போது தேவை இல்லை: உலக சுகாதார அமைப்புக்கு பரிந்துரை

லண்டன்: `குரங்கம்மை நோயை தற்போதைய சூழலில் அவசரநிலையாக அறிவிக்க வேண்டிய அவசியமில்லை,’ என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மத்திய, மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் மட்டுமே பரவி வந்த குரங்கம்மை, கடந்த சில மாதங்களாக 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி இருப்பது உலக சுகாதார அமைப்பை கவலை அடைய செய்துள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் இந்த வகை வைரசால் பாதித்துள்ள எலிகள், குரங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு குரங்கம்மை பரவியது.

காங்கோ, கேமரூன், மத்திய ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில், இந்நோயால் 70 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்த வாரத்தில் மட்டுமே உலகளவில் 40 நாடுகளில் 3,200 பேருக்கு குரங்கம்மை தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு கொரோனா, எபோலா, ஜிகா வைரஸ், போலியோ போன்ற தொற்றுகள் மக்களை தாக்கிய போது உலக சுகாதார அமைப்பு அவற்றை அவசர நிலையாக பிரகடனப்படுத்தியது. அதேபோல், குரங்கம்மை பரவலையும் அவசர நிலையாக அறிவிப்பது பற்றி அது பரிசீலித்து வந்தது. இந்நிலையில்,  தற்போதைய சூழலில் அவசர நிலையை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று உலக சுகாதார அமைப்புக்கு அவசர நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.  

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை குழு நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், ‘பல ஆண்டுகளாக சில ஆப்ரிக்க நாடுகளில் மட்டுமே பரவி வந்த குரங்கம்மை, இதுவரை பாதிக்காத நாடுகளிலும் இப்போது பரவி வருவது கவலை அளிக்கிறது. இன்னும் சில வாரங்களுக்கு இது எப்படி பரவுகிறது என்பதை தீவிரமாக கண்காணித்து, அதில் மாற்றங்கள் இருக்கும் பட்சத்தில், அவை மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதனால், குரங்கம்மை நோயை தற்போதைய சூழலில் அவசரநிலையாக அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று உலக சுகாதார அமைப்புக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: