நகைகளை திருடியதாக கூறி ஆதிவாசியின் கை, கால்களை கட்டி சூடு வைத்து சித்ரவதை: 3 பேர் கைது

தொண்டாமுத்தூர்: நகையை திருடியதாக கூறி ஆதிவாசியின் கை, கால்களை கட்டி வைத்து இரும்பு கம்பியால் சூடு போட்டு சித்ரவதை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை தொண்டாமுத்தூர் அடுத்த ஆலாந்துறை, முள்ளாங்காடு ஜெகஜீவன்ராம் வீதியை சேர்ந்தவர் சந்திரன் (50). ஆதிவாசியான இவர், கூலித் தொழிலாளி. கடந்த 23ம் தேதி மாலை  சந்திரனை முட்டத்துவயலை சேர்ந்த கோபால் (47), நரசிபுரம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த நஞ்சப்பன் (54) ஆகியோர் பட்டியார் கோவில்பதியில் உள்ள நடராஜ் என்பவரின் தோட்டத்தில் வேலை இருப்பதாக கூறி அழைத்து சென்றனர்.

வேலைக்கு சென்ற இடத்தில் திடீரென கோபால், நஞ்சப்பன் மற்றும் பட்டியார் கோவில்பதியை சேர்ந்த சின்னரத்தினம் (35) ஆகிய 3 பேரும் சேர்ந்து சந்திரன் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். 4 மாதத்திற்கு முன் தங்களது நகைகளை  திருடிவிட்டதாக கூறிய அவர்கள், சந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதோடு அவரின் கை, கால்களை கட்டிப்போட்டு அடித்துள்ளனர். மேலும், சூடான இரும்பு கம்பியை கையால் பிடிக்க செய்து சித்ரவதை செய்து, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதுகுறித்து சந்திரன் அளித்த புகாரின் பேரில் ஆலாந்துறை போலீசார் கொலை மிரட்டல், ஆபாச வார்த்தைகளால் பேசுதல், துன்புறுத்துதல் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கோபால், நஞ்சப்பன், சின்னரத்தினம் ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: