நாட்டின் பல்வேறு பகுதிகளில் திருப்பூரை போல் 75 நகரங்களை உருவாக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சு

திருப்பூர்: நாட்டின் பல்வேறு பகுதிகளில் திருப்பூரை போன்று 75 நகரங்களை உருவாக்க வேண்டும் என திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். திருப்பூர் அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் இந்திய ஏற்றுமதி சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் சார்பில் ஒன்றிய ஜவுளி மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு பாராட்டு விழா மற்றும் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

விழாவில் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது:

திருப்பூரில் அனைத்து பின்னலாடை நிறுவனங்களிலும் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. நாளை (இன்று) கூட சுமார் 50 ஆயிரம் பேர் வெளிமாநிலங்களில் இருந்து பணிக்காக வரவுள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்தனர். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த தகவல் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், 75 திருப்பூர்களை நாட்டின் வெவ்வேறு நகரங்களில் உருவாக்க வேண்டும். அந்த ஒவ்வொரு நகரமும் ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு ஜவுளி உற்பத்தி செய்ய வேண்டும். பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை அளிக்க வேண்டும். அடுத்த 30 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் 30 ட்ரில்லியன் டாலராக வளர்ச்சி பெறும். நாட்டில் 135 கோடி மக்கள் உள்ளனர். அனைவரும் ஒன்றிணைந்து உழைத்தால் அனைவருக்குமான வளர்ச்சியை பெறலாம். ஒருவர் ஒரு அடி முன்னெடுத்து வைத்தால், 135 கோடி பேரும் முன்னெடுத்து வைப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதில், ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், இந்திய ஏற்றுமதி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சக்திவேல், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, எம்எல்ஏ வானதி சீனிவாசன் எம்எல்ஏ, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக துணைத்தலைவர் சுதிர் சேக்ரி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம், சைமா சங்க துணைத்தலைவர் கோவிந்தப்பன், நிட்மா சங்கத்தலைவர் அகில் ரத்தினசாமி, டீமா சங்க தலைவர் முத்து ரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: