பெட்ரோலுக்கு ரூ.7, டீசலுக்கு ரூ.5 என தனியார் பங்க்குகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: அறிவிப்பு பலகை வைத்து விற்பனை

சேலம்: சேலத்தில் உள்ள தனியார் பங்க்குகளில் பெட்ரோல் ரூ.7ம், டீசல் ரூ.5ம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருளுக்கான விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயிக்கிறது. தற்போது நாடு முழுவதும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.103க்கும் அதிகமாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.95க்கு அதிகமாகவும் விற்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து விலை அதிகரித்த நிலையில், கடந்த 2 மாதத்திற்கும் மேலாக விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் நிலையாக வைத்துக் கொண்டுள்ளனர். பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து குறிப்பிட்ட அளவு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள், தற்போது விலையை உயர்த்திக் கொண்டுள்ளன. இந்தவகையில், சேலம் மாநகர் மற்றும் மாவட்ட பகுதியில் பல்வேறு இடங்களில் இயங்கும் தனியார் பெட்ரோல் பங்க்குகளில், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5ம் அதிகரித்து விற்பனை செய்து வருகிறது.

இதுதொடர்பான அறிவிப்பு பலகை மற்றும் நோட்டீஸ்களை பங்க்கில் பல்வேறு இடங்களில் ஒட்டி வைத்துள்ளனர். சேலத்தில் உள்ள பொதுத்துறை நிறுவன பங்க்குகளில் பெட்ரோல் லிட்டர் ரூ.103.36க்கும், டீசல் ரூ.95க்கும் விற்கப்படுகிறது. அதுவே தனியார் பங்க்கில் பெட்ரோல் ரூ.110.48க்கும், டீசல் ரூ.100.02க்கும் விற்கப்படுகிறது. விலையை கேட்டதும் சில வாகன ஓட்டிகள் அங்கு பெட்ரோல், டீசல் நிரப்பாமல் வேறு பங்க்கிற்கு செல்கின்றனர்.

ஊழியர்கள் கூறும்போது, ‘‘ஐஓசி, பாரத், எச்பி பங்க்குகளில் இருக்கும் பெட்ரோல், டீசல் விலையை விட அதிகமாக வைத்து விற்பதால், அதனை முதலில் வாடிக்கையாளர்களிடம் தெரிவித்து விடுகிறோம். விருப்பம் உள்ளவர்கள் நிரப்பிச் செல்கின்றனர். விருப்பமில்லாதவர்கள், உடனே புறப்பட்டுச் செல்கின்றனர். பெட்ரோல், டீசலை நிரப்பியபின், தகராறு வந்துவிடக்கூடாது என்பதற்காக முறையாக அறிவிப்பு செய்து விற்கிறோம்,’’ என்றனர்.

Related Stories: