இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 1.275 கிலோ தங்கம் பறிமுதல்: 3 இலங்கை பெண்கள் கைது

சென்னை: கொழும்பு நகரில் இருந்து ஸ்ரீலங்கன் பயணிகள் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது இலங்கையை சேர்ந்த பாத்திமா ரபியா (27), பாத்திமா நவியா (24), பாத்திமா ஆப்ரா (32) ஆகிய மூன்று பெண்கள் சுற்றுலா விசாவில் சென்னைக்கு வந்திருந்தனர்.

இந்த பெண்கள் தங்களிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறி விட்டு, கிரீன் சேனல் வழியாக வெளியில் செல்ல முயன்றனர். அப்போது சுங்க அதிகாரிகளுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து பெண் சுங்க அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, 3 பெண்களையும் நிறுத்தி விசாரித்தனர். அதில், முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதையடுத்து சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது.

பின்னர், பெண் சுங்க அதிகாரிகள் மூன்று பெண்களையும் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர். அவர்களுடைய உள்ளாடை மற்றும் தலை முடியில் பொருத்தும் ரப்பர் பேண்ட் ஆகியவற்றில்  தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இவர்களிடமிருந்து ஒரு கிலோ 275 கிராம் தங்கத்தை கைப்பற்றினர். இதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 59.26 லட்சம். இதையடுத்து, மூன்று பெண்களையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தங்கத்தை சென்னையில் யாரிடம் கொடுக்க எடுத்து வந்தனர் என்பது குறித்து விசாரணை நடக்கிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகமாகி விட்டதால் வாழ்வாதாரத்தை இழந்த பல பெண்கள் இதேபோல் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

Related Stories: