அடுத்த மாதம் 10ம் தேதி ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.!

திருப்போரூர்: தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திருப்போரூர் ஒன்றியத்தில் பல்வேறு ஆய்வு மேற்கொண்டார். கேளம்பாக்கம் அடுத்த ஏகாட்டூர் பகுதியில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர்களில் 3 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அனைவரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவர்களின் வீடுகளுக்கு சென்று உடல் நலன் குறித்தும், சிகிச்சை குறித்தும் விசாரித்தார்.

இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்புவாசிகளுக்கு தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார். குடியிருப்பில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டை பொறுத்தவரை 4 மாதங்களுக்கு பிறகு 1359 என்ற உச்சபட்சத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலானோர் தடுப்பூசியை போட்டிருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொற்று பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்படுவதால் இந்த மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை ஆய்வு செய்தோம்.இந்த குடியிருப்பில் 6 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் மூன்று பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இந்த தொற்று பிஏ4 மற்றும் பிஏ5 வகை தொற்றை சேர்ந்தது. இதுவேகமாக பரவும் வகையை சேர்ந்தது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை 945 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 10 பேர் அரசு மருத்துவமனையிலும் 32 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மீதமுள்ள 903 பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொற்று வேகமாக பரவினாலும் குறைந்த அளவிலேயே காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி போன்ற அறிகுறிகளுடன் உள்ளது. இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற நிலை ஏற்படவில்லை. அடுத்த மாதம் 10ம் தேதி 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்க இருக்கிறோம். பூஸ்டர் தடுப்பூசியை பொறுத்தவரை  தனியார் மருத்துவ மனைகளில் 386 ரூபாய்க்கு போடப்படுகிறது. இதையும் சமூக பங்களிப்பு நிதியின்கீழ் இலவசமாக போட ஏற்பாடு நடைபெற்று வருகிறது. தொற்று பாதிக்காதவகையில் மக்கள் பாதுகாப்புடன் இருக்கவேண்டும். இவ்வாறு கூறினார்.

Related Stories: