சிவசேனா போட்டி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் மகாராஷ்டிராவில் பாஜ ஆட்சி அமைக்க முயற்சி; அமித்ஷாவுடன் இன்று ஆலோசனைக்கு பின் முக்கிய முடிவு.!

மும்பை: மகாராஷ்டிராவில், சிவசேனா போட்டி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பாஜ முயற்சி செய்து வருகிறது. இதன் முதல்கட்டமாக, குஜராத் மாநிலம் வதோதவில் நேற்று நள்ளிரவு ஏக்நாத் ஷிண்டேவும் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரான பட்னாவிசும் சந்தித்து பேசினர். இன்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பட்னாவிஸ் ஆலோசனை நடத்துகிறார். இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40க்கும் மேற்பட்ட சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ.க்கள், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்கொடி   உயர்த்தியுள்ளனர். அவர்கள் அசாம் மாநிலம், கவுகாத்தி ஓட்டலில் முகாமிட்டுள்ளனர். இதனால், மகா விகாஸ் கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

உத்தவ் தாக்கரே, சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தும், அதிருப்தி எம்எல்ஏ.க்கள், தங்கள் முடிவை மாற்றி கொள்ளவில்லை. இதனால் சிவசேனா தொண்டர்கள் ஆவேசமடைந்து வன்முறையில் ஈடுபட தொடங்கியுள்ளனர். அதிருப்தி எம்எல்ஏ.க்களின் குடும்பத்தினர் மீது சிவசேனா தொண்டர்கள் தாக்குதல் நடத்தும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால், மும்பையில் உள்ள ஷிண்டேவின் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மும்பையில் ஏற்கனவே மாநிலங்களவை தேர்தலுக்காக பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை ஜூலை 10ம் தேதி வரை நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தானேயிலும் வரும் 30ம் தேதி வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிருப்தி எம்எல்ஏ.க்களால் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பாக விவாதிக்க, சிவசேனாவின் தேசிய செயற்குழு கூட்டம் உத்தவ் தாக்கரே தலைமையில் நேற்று மும்பையில் நடந்தது.

இதில்,  ‘உத்தவ் தாக்கரேயின் தலைமையில்தான் சிவசேனா செயல்பட வேண்டும். கட்சிக்கு எதிராக செயல்படும் அதிருப்தியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தவ் தாக்கரேவுக்கு செயற்குழு முழு அதிகாரத்தை வழங்குகிறது.  சிவசேனாவை தவிர வேறு எந்த அமைப்பும், சிவசேனாவின் பெயரையோ, கட்சியின் நிறுவனரான பாலாசாகேப் பால்தாக்கரேயின் பெயரையோ பயன்படுத்த கூடாது,’ என்பது உட்பட 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கிடையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி பாஜவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்று அசாமில் முகாமிட்டுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள், உத்தவ் தாக்கரேவுக்கு நிபந்தனை விதித்துள்ளனர். இந்நிலையில், அடுத்த கட்டமாக ‘சிவசேனா பாலசாகேப் கட்சி’ என்று தனது அணிக்கு ஷிண்டே நேற்று பெயர் சூட்டினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சிவசேனா கட்சியின்  சட்டப்பேரவை குழு தலைவராக இருந்த ஷிண்டேவின் பதவி பறிக்கப்பட்டு, சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஷிண்டேவுடன் உள்ள எம்எல்ஏ.க்களில் 16 பேரை கட்சி தாவல் தடை சட்டத்தின்படி தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக விளக்கம் கேட்டு, துணை சபாநாயகர் நர்கரி ஜிர்வால் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அதற்கு நாளைக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். ஆனால், தங்கள் அணியில் 38க்கும் மேற்பட்ட சிவசேனா எம்எல்.ஏ.க்கள் இருப்பதால், கட்சி  தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது ஷிண்டே அணி அறிவித்துள்ளது. இந்நிலையில் திடீர் திருப்பமாக நேற்றிரவு கவுகாத்தியில் இருந்து தனி விமானம் மூலம் ஏக்நாத் ஷிண்டே, குஜராத் மாநிலம் வதோதராவுக்கு வந்தார். அதே போல் மும்பையில் இருந்து பாஜ தலைவர் தேவேந்திர பட்னாவிசும், தனி விமானத்தில் வதோரா வந்தார்.

நள்ளிரவுக்கு பின்னர், இருவரும் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் இன்று காலை ஏக்நாத் ஷிண்டே, தனி விமானம் மூலம் மீண்டும் கவுஹாத்திக்கு திரும்பினார். முன்னதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வதோதரா வந்து சேர்ந்தார். ஏக்நாத் ஷிண்டேவுடன் நடந்த பேச்சுவார்த்தை விபரங்கள் குறித்து, தேவேந்திர பட்னாவிஸ், அமித்ஷாவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆதரவோடு பாஜ, ஆட்சி அமைக்க உள்ளதாக தெரிகிறது. மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 288 எம்எல்ஏக்கள் உள்ளனர். 105 எம்எல்ஏக்களுடன், பாஜ தனிப்பெரும்பான்மையுடன் உள்ளது.

ஆட்சி அமைக்க 145 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் ஷிண்டே வசம் 50 எம்எல்ஏக்கள் உள்ளதால், பாஜ தலைமையில் ஆட்சி அமைப்பது குறித்து, வதோதராவில் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு, நாளை முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அடுத்தடுத்த நகர்வு மூலம் சிவசேனா கிளர்ச்சி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் மகாராஷ்டிராவில் பாஜ ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது. ஏக்நாத் ஷிண்டேவும், தேவேந்திர பட்னாவிசும் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுடன் இன்று நடத்தும் ஆலோசனைக்கு பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.

Related Stories: