கொள்ளிடம் ஆற்றில் கடைமடை கட்டமைப்பு கட்ட ரூ.540 கோடி நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும்; முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி கடிதம்

சென்னை: கடலூர் - மயிலாடுதுறை மாவட்டங்களில் கடல் நீர் உட்புகுவதை தடுக்கும்  வகையிலும், நிலத்தடி நீரின் தரத்தை மேம்படுத்தும் வகையிலும் அளக்குடி - திருக்கழிப்பாலை கிராமங்களுக்கு இடையே கடைமடை கட்டமைப்பு சுவர் அமைப்பதற்காக ரூ.540 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: கொள்ளிடம் ஆற்றிலிருந்து அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டதால் அளக்குடியில் தொடங்கி 22 கிலோ மீட்டர் அளவுக்கு கடல் நீர் உள்நுழைந்திருக்கிறது. சந்தப்படுகை, திட்டுப்படுகை, அனுமந்தபுரம், முதலைமேடு உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பாக மாறிவிட்டது.

இதனால், குடிப்பதற்குக் கூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். மேலும், இப்பகுதிகளில் உள்ள 10,000 ஏக்கர்  விளைநிலங்கள் உவர் நிலங்களாக மாறி விட்டன. இதனால் அப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்வதையே முற்றிலுமாக நிறுத்தி விட்டனர். இத்தகைய சூழலில் இனியும் தாமதிக்காமல் அளக்குடி - திருக்கழிப்பாலை கடைமடை கட்டமைப்புச் சுவரை உடனடியாக அமைத்தால் தான் இந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர் வீணாவதை தடுக்க முடியும். வங்கக்கடலில் இருந்து 8 கி.மீ தொலைவில் அளக்குடி பகுதியில்  கடைமடை கட்டமைப்பு  கட்டுவதற்கு ரூ.540 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த கடைமடை கட்டமைப்புச் சுவர் கட்டி  முடிக்கப் பட்டால், அதில் 0.366 டி.எம்.சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இந்தத் திட்டத்திற்கான ஆய்வுப் பணிகளுக்காக ரூ.94.52 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மண் பரிசோதனை மற்றும்  பிற ஆய்வுப் பணிகளும் நிறைவடைந்து விட்டன.

இந்தத் திட்டத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி நீர்வளத்துறையின் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிகிறேன். இந்த பணிகள் முடிவடைந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால்,  ஒப்பந்தப்புள்ளிகளைப் பெற்று  கடைமடை கட்டமைப்புச் சுவரை கட்டும் பணிகளை தொடங்க முடியும். அதேபோல், மயிலாடுதுறை மாவட்டம் மாதிரிவேளூர் - கடலூர் மாவட்டம் -நல்லாம்புத்தூர் இடையே  கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டுவதன் மூலம் அப்பகுதியில் உள்ள ஏராளமான கிராமங்கள் பயனடையும். இந்தத் திட்டத்தையும் ரூ.399 கோடி செலவில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டு, திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் திருச்சி மண்டலத்தில் நடைபெற்று வருவதாக அறிகிறேன்.

அளக்குடி & திருக்கழிப்பாலை கடைமடை கட்டமைப்புச் சுவர், மாதிரிவேளூர்  -நல்லாம்புத்தூர் தடுப்பணை ஆகிய இரு திட்டங்களையும் செயல்படுத்தினால் இருநூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடையும். பல்லாயிரக்கணக்கான  ஏக்கர் நிலங்களில் விவசாயம் மறுமலர்ச்சி பெறும். இந்த நன்மைகளைக் கருத்தில் கொண்டு இந்த இரு திட்டங்களுக்கும் உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: