சாலையில் வைக்கப்படும் விளம்பர பேனர்களால் உயிர்பலி ஏற்படும் அபாயம்

கீழக்கரை:  கீழக்கரையில் விளம்பர பேனர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். கீழக்கரை முக்கு ரோடு பகுதியில் 10-க்கும் மேற்பட்ட விளம்பர பேனர்கள் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதால் பேருந்துகள் திரும்புவதற்கு மிக சிரமம் அடைந்து வருகின்றனர்.

 சீதக்காதி சாலை மற்றும் பேருந்து நிலையம் செல்லும் வளைவிலும் தினமும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஆயிரக்கணக்கானோர் கடந்து செல்கின்றனர். சில பேனர்கள் எந்த ஒரு பிடிமானமும் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மீது விழுந்து உயிர் பலி ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் கடந்து செல்கின்றனர்.

கடந்த 2019-ம் ஆண்டு சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பேனர் விழுந்து ஒரு பெண் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அதனை அடுத்து பொது இடங்களில் விளம்பர பேனர்கள் வைப்பதற்கு தமிழகம் முழுவதும் ஐகோர்ட் தடை விதித்துள்ளது. இதையடுத்து பேனர்கள் வைப்பது முற்றிலும் தவிர்க்கப்பட்டன.

இந்த நிலையில் கீழக்கை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மீண்டும் நூற்றுக்கணக்கான விளம்பர பேனர்கள் மற்றும் விளம்பர போர்டுகள் வைப்பதற்கு நகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்திருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிலர் சுய விளம்பரத்திற்காக பொதுமக்கள் நடமாடக் கூடிய இடங்களிலும், போக்குவரத்து அதிகம் உள்ள இடங்களிலும் பொதுமக்களுக்கு இடையூறாக பல பேனர்களை வைத்திருக்கின்றனர்.

இதனால் காற்று அடித்தால் வாகன ஓட்டிகள் மீது சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் பேனர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: