தேங்காப்பட்டணத்தில் திடீர் கடல் சீற்றம் அரயந்தோப்பு சாலை மணல் மேடானது

புதுக்கடை: தேங்காப்பட்டணத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் கடல் சீற்றத்தால் அரயந்தோப்பு பகுதி சாலை  மணல் மேடாகி போக்குவரத்து பாதிப்பு  ஏற்பட்டது. குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் ஆண்டு தோறும்  மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலகட்டங்களில் கடல் சீற்றம் அதிகமாக ஏற்படுவது வழக்கம்.

இதையடுத்து கடலோர  பகுதிகளில் கடலரிப்பு தடுப்பு சுவர்கள் அமைத்து பாதுகாப்பு  வசதிகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் தேங்காப்பட்டணம்  அருகில் உள்ள அரயந்தோப்பு  கிராமப்பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு  ஏற்பட்ட  கடலரிப்பால் தடுப்பு  சுவர்கள்  அனைத்தும்  கடலில்  அடித்து செல்லபட்டன.

இதனால்  தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம்  செல்லும் முள்ளூர்துறை, ராமன் துறை, இனயம் புத்தன்துறை உள்ளிட்ட  பல கிராம மீனவர்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும்  மாணவ மாணவிகள்  பல கிலோ மீட்டர் தூரம்  சுற்றி  பயணம் செய்யும்  நிலைக்கு தள்ளப்பட்டனர்.

அரசு அந்த பகுதியில் பலமுறை தடுப்பு சுவர் அமைத்தாலும் வருடம் தோறும் ஏற்படும் கடல் சீற்றத்திற்கு தாக்கு பிடிக்காமல் கடலில் அடித்து செல்வது தொடர்கதையாகிவிட்டது.  தொடர்ந்து பல ஆண்டுகள் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டிருந்த நிலையில் கடந்த சில மாதம் முன்பு பொதுமக்கள் முயற்சியால் கடற்கரை சாலை சீரமைக்கப்பட்டு, மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் கடல் சீற்றம் ஏற்பட்டது. அப்போது ராட்சத அலைகள் அரயந்தோப்பு கடற்கரை சாலையை ஆக்ரமித்தது.  இதனால் சாலையில் மணல் குவியல் ஏற்பட்டு மீண்டும் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. எனவே அரையந்தோப்பில் நிரந்தரமாக நவீன தொழில்நுட்ப  உதவியுடன் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: