பென்னிகுக் மணிமண்டபத்தில் பொதுக்கழிப்பறை செயல்பாட்டிற்கு வருமா? சுற்றுலாப்பயணிகள் எதிர்பார்ப்பு

கூடலூர்: லோயர்கேம்பிலுள்ள கர்னல் பென்னிகுக் மணிமண்டபத்தில், சுற்றுலாப்பயணிகளுக்காக கட்டப்பட்ட பொதுக்கழிப்பறை பல மாதங்களாக பூட்டிக் கிடக்கிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

முல்லைப்பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னிகுக்கினை நினைவுகூறும் விதமாக, தமிழக அரசு, கூடலூர் நகராட்சியின் 21 வது வார்டு பகுதியான லோயர்கேம்ப்பில் ரூ 1.25 கோடி செலவில், அவரது முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை 2013-ல் கட்டியது.

அதைத்தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் மணிமண்டபத்தை தினந்தோறும் பார்வையிட்டு செல்கின்றனர். சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களும், சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடிக்கு செல்லும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், பள்ளி மாணவமாணவியரும் பென்னிகுக் மண்டபத்திள்ள பென்னிகுக்கின் சிலை, பெரியாறு அணை மாதிரி மற்றும் அணை குறித்த புகைப்படங்களையும் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

இந்த மணிமண்டபம் தமிழ்நாடு பொதுப்பணித்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக இந்த மணிமண்டபத்தை ஒட்டி வெளிப்பகுதியில், ரூ.9.50 லட்சம் செலவில் சுற்றுலா வளர்ச்சி நிதியில் கழிப்பறை கட்டப்பட்து. ஆனால் கடந்த பல மாதங்களாக கழிப்பறையை பூட்டி வைத்துள்ளனர்.

கழிப்பறை பயன்பாட்டில் இல்லாததால் குறிப்பாக இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெண்களும், குழந்தைகளும் அதிகம் சிரமப்படுகின்றனர். எனவே, சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சுற்றுலாப்பயணிகள் கூறுகையில், மணி மண்டபத்தை பார்வையிட நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். இவர்களின் இயற்கை உபாதை பிரச்னைகளுக்காக சுற்றுலா வளர்ச்சி நிதியில் கழிப்பறையும் கட்டப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை, கோப்பை உடைந்துள்ளது, கழிப்பறையை கவனிக்க ஆட்கள் இல்லை என்ற காரணத்தைக் காட்டி கழிப்பறையை பூட்டி வைத்துள்ளனர்.

மணிமண்டப பராமரிப்பிற்கென்றே ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ரூபாய் அரசால் வழங்கப்படுகிறது. இருந்தும் கழிப்பறை பிரச்னையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். எனவே, கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Related Stories: