பூரணாங்குப்பத்தில் உள்ள தாமரைக்குளத்தை சுற்றி தடுப்பு சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தவளக்குப்பம்: புதுவை தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தில் மொய்யாங்குளம், தாமரைகுளம் உள்ளிட்ட சில குளங்கள் உள்ளன. இந்த குளங்களை ஆழப்படுத்தி, கரைகளை மேம்படுத்த அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பூரணாங்குப்பம் தெற்கு பகுதியில் ரோஜா நகர் அருகில் தாமரைக்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் கரைகள் பெரிய அளவிலான கருங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் இருந்து வருகிறது. இந்த குளத்தை சுற்றி குடியிருப்புகள் அதிகம் உள்ளது.

 இதனால் பொதுமக்கள், சிறுவர்கள், முதியவர்கள் என பலதரப்பினரும் இவ்வழியாக நடந்து சென்று வருகிறார்கள். அவ்வாறு செல்லும்போது குளத்தில் தவறி விழ வாய்ப்புள்ளது. மேலும் இந்த குளத்தின் எதிரில் விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ளன. விவசாயிகள் தங்களது கால்நடைகளை இந்தக்குளம் அமைந்துள்ள பாதை வழியாக அழைத்து சென்று வருகின்றனர்.

அப்போது கால்நடைகளும் குளத்தில் தவறி விழ வாய்ப்புள்ளது.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், குளத்தை நேரில் ஆய்வு செய்து தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: