பூதலூர் சித்திரக்குடி பகுதியில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்

வல்லம்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் சித்திரக்குடி, புது கல்விராயன்பேட்டை மற்றும் சுற்றுப்பகுதியில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக இறங்கி உள்ளனர். ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு மே மாதம் 24-ம் தேதியே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

தொடர்ந்து கல்லணையிலிருந்து 27ம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் ஆறு, வாய்க்கால்களில் வர தொடங்கி உள்ளது. இதையடுத்து விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் மும்முரம் அடைந்துள்ளனர். அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, சித்தாயல், ராயந்தூர், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், களிமேடு, ரெட்டிப்பாளையம் பகுதிகளில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பகுதிகளில் வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் ஆற்று தண்ணீரை கொண்டு சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளது. உரம், விதை நெல் எவ்வித தட்டுப்பாடும் இன்றி கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து சாகுபடி பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

சாகுபடி பணிகள் குறித்து பூதலூர் விவசாயி சுதாகர் கூறுகையில், நாற்றங்கால் விடும் பணி, இயந்திர நடவு நாற்றங்கால், நேரடி நெல் விதைப்பு என்று விவசாயிகள் குறுவை சாகுபடியில் மும்முரம் காட்டி வருகின்றனர். தற்போது வரை தண்ணீர், உரம், விதை நெல் எவ்வித தட்டுப்பாடும் இல்லாமல் கிடைத்து வருகிறது. இதனால் விவசாயப்பணிகளில் எவ்வித சுணக்கமும் இல்லை.

 வெகு வேகமாக குறுவை சாகுபடி பணிகள் நடந்து வருகிறது. வரும் நாட்களிலும் உரம் தட்டுபாடு இல்லாமல் கிடைப்பதற்கும், மானிய விலையில் உரத்தை விவசாயிகளுக்கு வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அறுவடை நேரத்தில் நெல்லுக்கான விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றார்.

Related Stories: