மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பில் இருந்த விருதுநகரை சேர்ந்த நபர் கைது

விருதுநகர்: மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பில் இருந்த விருதுநகரை சேர்ந்த ஐயப்பன் என்பவரை புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஐயப்பனை விசாரணைக்காக அதிகாரிகள் டெல்லி அழைத்து சென்றுள்ளனர்.

ஆந்திரா, ஒடிஷா, ஜார்க்கண்ட், மராட்டியம் உள்ளிட்ட எல்லை வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் பதுங்கியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம், கேரளா எல்லையில் நிலம்பூர் வனப்பகுதியில் ஊடுருவிய மாவோயிஸ்டுகள், அங்கு முகாமிட்டு ஆயுதப் பயிற்சி மேற்கொண்டனர்.

இதையடுத்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்ட கேரளா போலீசார், மாவோயிஸ்டுகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் அஜிதா உள்ளிட்ட மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். பின்னர் நிலம்பூர் மாவோயிஸ்டுகள் பயிற்சி தொடர்பான வீடியோ பதிவுகளை கேரளா போலீசார் வெளியிட்டிருந்தனர். அந்த வீடியோவில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இந்த வழக்கு பின்னர் தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்ஐஏக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த என்ஐஏ, அதிகாரிகள் தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விருதுநகர் தம்மநாயக்கன்ப்படியை சேர்ந்த ஐயப்பன் எனபவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

நிலம்பூர் வனப்பகுதியில் ஐயப்பன் மாவோயிஸ்டுகளின் ஆயுதப் பயிற்சியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பில் இருந்த ஐயப்பன் கைது செய்யப்பட்டார். என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஐயப்பன் முதலில் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் கேரளாவுக்கு விசாரணைக்காக ஐயப்பன் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories: