சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் வியாபாரிகள் பயணம்

புழல்:புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தினசரி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு  வேன்களில் காய்கறி, கீரை மூட்டைகளை வியாபாரிகள் ஏற்றி வருகின்றனர். அவ்வாறு கொண்டு வரும்போது, அவர்கள் வேனிலேயே ஆபத்தான நிலையில் அமர்ந்தபடி வருகின்றனர். அதேபோல், கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து காய்கறி, பழவகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஏற்றிக்கொண்டு, காலை நேரங்களில் சென்னை மாநகர் உள்பட புறநகர் பகுதிகளுக்கு கொண்டு செல்லும் பெண்கள்,  வியாபாரிகள், மூட்டைகளின்மீது அமர்ந்தவாறும், வேனின் பின்பக்கத்தில் ஆபத்தான முறையில் நின்றபடியும் செல்கின்றனர்.

இந்நிலையில்,  அந்த வேன் ஓட்டுநர் திடீரென்று பிரேக் போடும்போது, மூட்டைகளின்மீது அமர்ந்து கொண்டு, கால்களை தொங்க விட்டு செல்பவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். சில சமயங்களில் உயிரிழப்பு போன்ற பெரிய அசம்பாவிதங்களும் நடைபெறுகின்றன. இதேபோல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கூலிவேலைக்கு செல்பவர்களும் வேன், டிராக்டர்களில் அபாயநிலையில் ஏற்றி செல்லப்படுகின்றனர். இதனால் சாலை விபத்துகள் மூலம் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே, தீவிர வாகன சோதனை நடத்தி, இதுபோன்று ஆபத்தான நிலையில் பயணம் செய்பவர்களை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’என்றனர்.

Related Stories: