தமிழகத்தில் விமான பயணிகள் எண்ணிக்கை 19 லட்சமாக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கை 19 லட்சமாக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக, உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்களின் சேவை பெருமளவில் குறைக்கப்பட்டன. பின்னர், கொரோனா தொற்று இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தபோது பலர் உள்நாட்டு விமான பயணங்களை தவிர்த்து விட்டனர். இதேபோல் சர்வதேச விமானங்களில் வந்தே பாரத் மீட்பு விமானங்கள் மற்றும் சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்ததால், இதர விமான பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தீவிர நோய் தடுப்பு நடவடிக்கையால், தமிழகத்தில் 2021ம் ஆண்டு, ஜூன் மாத இறுதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று வேகமாக குறைய தொடங்கியது. தமிழ்நாட்டில் விமான பயணிகளின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. பின்னர் உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்களின் சேவை அதிகரிக்கப்பட்டன.

தமிழக விமான நிலையங்களில் கடந்த ஏப்ரல் மாதம் விமானங்களில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 17.35 லட்சம். கடந்த மே மாதம் 19 லட்சமாக இருந்தது. இந்நிலையில், கடந்த மே மாதத்தில் தமிழகத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 19 லட்சமாக அதிகரித்துள்ளது.  இதில், சென்னை விமான நிலையத்தில் மட்டும் கடந்த மாதம் உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்களில் அதிகபட்சமாக, 14.61 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். மேலும், கோவை விமான நிலையத்தில் 2.19 லட்சம் பேர், திருச்சி விமான நிலையத்தில் 1.12 லட்சம் பேர், மதுரை விமான நிலையத்தில் 90 ஆயிரம் பேர், தூத்துக்குடி விமான நிலையத்தில் 18,800 பேர் விமானங்களில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.முந்தைய எண்ணிக்கையை விட கடந்த மாதம் 1.65 லட்சம் வரை விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: