அதிமுக ஆபீஸ்களில் ஓபிஎஸ் படம் அகற்றம் பல இடங்களில் இபிஎஸ் உருவபொம்மை எரிப்பு

சென்னை: அதிமுகவில் ஏற்பட்ட மோதலையடுத்து தமிழகம் முழுவதும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மாநில முக்குலத்தோர் இளைஞர் பாசறை பெயரில் அதிமுகவின் முதல் எம்பியும், இரட்டை இலை சின்னத்தை தேர்ந்தெடுத்த முன்னாள் எம்பியுமான கே.மாயத்தேவர் பெயருடன் ஓ.பன்னீர்செல்வம் படத்துடன் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இது முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் ஆதரவாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சின்னாளபட்டி எல்லப்பட்டியைச் சேர்ந்த அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை முன்னாள் தலைவர் ராஜேஷ், கே.மாயத்தேவர் மகன் செந்தில் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்படுவார் என்றனர். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆதரவாளர்கள் உடனடியாக போஸ்டர்களை கிழித்து அப்புறப்படுத்தினர்.ஓபிஎஸ் படங்கள் அகற்றம்: திருச்சி தில்லைநகரில் உள்ள அதிமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஓ.பன்னீர்செல்வம் படம் கிழிக்கப்பட்டது. அலுவலகம் வெளியே வைக்கப்பட்டுள்ள பேனரில் ஓபிஎஸ் படம் மறைக்கப்பட்டது. இதேபோல், திருச்சி புதுகை சாலையிலுள்ள தெற்கு மாவட்ட அலுவலகத்தில் ஓபிஎஸ் படம் அகற்றப்பட்டது. நாகை மாவட்டம் வேதாரண்யம் ராஜாஜி பூங்கா எதிரே ஓபிஎஸ் ஆதரவாளர்களான, முன்னாள் நகர அதிமுக துணை செயலாளர் வீரராசு, நகர அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் சதீஷ் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி உருவ பொம்மையை எரித்தனர். பின்னர் எடப்பாடி பழனிசாமி ஒழிக, ஓபிஎஸ் வாழ்க என கோஷங்களை எழுப்பினர்.

 எடப்பாடி பழனிசாமியை கண்டித்து, ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேருந்து நிலையம் முன்பு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது எடப்பாடியின் படத்தை கிழித்து எறிந்தனர்.  பசும்பொன் கிராமத்தில் கடந்தாண்டு தேவர் குருபூஜையின்போது வரவேற்பு விளம்பரத்தில் எழுதப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் பெயரை பெயின்ட் பூசி அழித்தனர். முதுகுளத்தூர் அருகே கீழத்தூவலில் எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை எரித்து, கண்டன கோஷமிட்டனர். கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகம் விருத்தாசலம் புதுக்கூரைப்பேட்டை பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது. இங்கு ஓபிஎஸ் படம் இருந்த அறிவிப்பு பலகை அகற்றப்பட்டு, புதிதாக  எடப்பாடி பழனிசாமி படத்துடன் வைக்கப்பட்டது.

Related Stories: