டெல்லியில் அடமானம் வைத்த அதிமுகவை மீட்க வேண்டும்: கி.வீரமணி பேட்டி

மதுரை: டெல்லியில் அடமானம் வைத்த அதிமுகவை மீட்க வேண்டும் என்று திக தலைவர் வீரமணி தெரிவித்தார்.மதுரை தெப்பக்குளத்தில் திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அளித்த பேட்டி: சேது சமுத்திர கால்வாய்திட்டம் செயல்படுத்த வேண்டும். திராவிட மாடல் அரசை பற்றிய அவதூறு பிரசாரத்திற்கு கண்டனம், அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு உள்ளிட்ட 8 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அக்னிபாத் திட்டத்தில் இணைந்தால் துணி துவைக்கலாம், முடி திருத்த போகலாம் என பாஜவினர் கூறுவது இளைஞர்களின் கோபத்தை தூண்டுகிறது.

வேளாண் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது போல, அக்னிபாத்திற்கு எதிராக இளைஞர்கள் எந்த அரசியல் பின்புலமின்றி போராடி வருகின்றனர். பாஜ எதிர்க்கட்சிகளை பிரித்தாளுகிறது, தமிழகத்தில் எதிர்க்கட்சியை வைத்து பொம்மலாட்டம் நடத்துகிறது. அதிமுகவினர் ஜெயலலிதாவை மறந்து விட்டார்கள். அக்கட்சி தற்போது டெல்லியின் அடமானமாக உள்ளது. லேடியா? மோடியா? என கேட்ட ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிராக திசைமாறி செல்கின்றனர். அதிமுகவின் பொதுக்குழுவால் புதுக்குழு தான் உருவாகிறது. அதிமுக தங்களது அடமானத்தை மீட்டு, தமிழ் மானம் காக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: