ஒன்றிய அரசின் இறக்குமதி கொள்கை கண்டித்து தேங்காயை நடுரோட்டில் உடைத்து விவசாயிகள் திடீர் போராட்டம்

பட்டுக்கோட்டை: கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ 150ம், உரித்த தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 50ம் விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தென்னை விவசாயிகள், தேங்காய்கள், பதாகைகளுடன் பட்டுக்கோட்டை - அறந்தாங்கி ரோடு முக்கம் காந்தி சிலையிலிருந்து பேரணியாக புறப்பட்டனர். பேருந்து நிலையத்தை அடைந்ததும் விவசாயிகள், தேங்காய்களை அரசே கொள்முதல் செய்யவும், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கவும் கோரி கோஷமிட்டனர்.  பின்னர் ஒரே நேரத்தில் நடுரோட்டில் தேங்காய்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வரை ஒரு தேங்காய்க்கு 11 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விலை இருந்தது. தற்போது ஒரு தேங்காய்க்கு 7 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை விலை உள்ளது. இதற்கு காரணம் ஒன்றிய அரசின் இறக்குமதிதான். பாமாயில் இறக்குமதி, எண்ணெய், புண்ணாக்கு என்ற பெயரில் வரியில்லா இறக்குமதியால் தான் தென்னை விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தென்னை விவசாயிகள் விஷயத்தில் ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தென்னை விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்றனர்.

Related Stories: