கோவை: பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்று கோவை கலெக்டர் தெரிவித்துள்ளார்.கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 21ம் தேதி 42 ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை நேற்று 89 ஆக உயர்ந்துள்ளது. எனவே கொரோனா பாதிப்பை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது பற்றி கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கூறுகையில், சுகாதாரத்துறை நாளொன்றுக்கு செய்யும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா விதிகளை முழுமையாக பின்பற்ற உறுதி செய்ய வேண்டும். இவ்விடங்களில் நுழைபவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யவும், கிருமி நாசினி வைக்கவும் வேண்டும்.பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருக்கும் நபர்களுக்கு, பொது சுகாதார சட்டத்தின் கீழ் ரூ.500 அபராதமாக வசூலிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.