அதிமுக தரப்பில் தப்பு தப்பாக உளறிக்கொட்டுவதால் மாஜி அமைச்சர்கள், இரண்டாம் கட்ட தலைவர்கள் பேட்டி அளிக்க தடை: எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு

சென்னை: சட்ட விதிகளை கூறி பேச தெரியாததாலும், உளறிக் கொட்டுவதோடு தப்பும் தவறுமாக பேசுவதாலும் இனிமேல் தலைமை சொல்லாமல் யாரும் பேட்டி அளிக்கக் கூடாது என்று மாஜிக்களுக்கு எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.அதிமுகவில் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணிக்கும், சசிகலா அணிக்கும் மோதல் எழுந்தது. தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி அணிக்கும், சசிகலா அணிக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போதுதான் எடப்பாடி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்று சேர்ந்தது. ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இரட்டை இலை காப்பாற்றப்பட்டது. இப்போது மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்கும், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் பொதுக்குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, சென்னை உயர் நீதிமன்ற வழக்கில், பொதுக்குழு நடத்தலாம். புதிய தீர்மானங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதனால் எடப்பாடி பழனிசாமி அணியினர் உற்சாகமடைந்தனர். பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வந்தனர்.

ஆனால், நள்ளிரவில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள், புதிய தீர்மானங்கள் நிறைவேற்ற தடை உத்தரவு பிறப்பித்தனர். இந்த நீதிமன்ற வழக்கு தொடருவதற்கு 2 நாட்களுக்கு முன்னர் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கும் வக்கீல்கள், நீதிமன்றம் செல்லாத செட்டிங் வக்கீல்கள். எங்களிடம்தான் கோர்ட்டுக்கு போகும் வக்கீல்கள் உள்ளனர் என்றார். மேலும், தங்கள் அணி, நீதிமன்ற தீர்ப்பில் வென்றதாக பன்னீர்செல்வம் அணியினர் கூறிவருகின்றனர்.இந்நிலையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லாது என்று எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். ஆனால் ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லும். தற்போது ஓ.பன்னீர்செல்வம்தான் ஒருங்கிணைப்பாளர் அதில் மாற்றம் இல்லை என்று முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெ.சி.டி.பிரபாகர், கோவை செல்வராஜ் ஆகியோர் கூறியதோடு, சண்முகம் தப்பு தப்பாக பேசுவதாக கூறினார். இதனால் இரு தரப்பினரும் நீதிமன்ற விவகாரம் குறித்த விஷயங்களையும், சட்ட பிரச்னைகளையும் வெளியில் பேசுவதால் மக்கள் கடும் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையே தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர். நிர்வாகிகள்தான் எடப்பாடி பழனிசாமி பக்கம் உள்ளனர் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கூறிவருகின்றனர். ஆனால் நிர்வாகிகளும், தொண்டர்களும் எங்கள் பக்கம்தான் உள்ளனர் என்று எடப்பாடி பழனிசாமி அணியினர் கூறி வருகின்றனர். இதனால் யார் பக்கம் நியாயம் உள்ளது என்று தெரியாமல் தொண்டர்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர். யார் பக்கம் சேருவது என்றும் குழம்பி வருகின்றனர்.இந்நிலையில், தேவையில்லாமல் யாரும் பேசி குழப்ப வேண்டாம். இதனால் யாரும் எந்த பேட்டியோ, தகவல்களோ கொடுக்கக்கூடாது என மாஜிக்கள் உள்ளிட்ட இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு எடப்பாடி தடை போட்டுள்ளார். இது அந்த அணியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: