ஏக்நாத் ஷிண்டேவுடன் அசாமில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் குடும்பங்களுக்கு குறி?

* சிவசேனா தொண்டர்களால் தாக்கப்படும் அபாயம்

* மகாராஷ்டிராவில் பதற்றம்; 144 தடை உத்தரவு அமல்

புனே: அசாமில் ஏக்நாத் ஷிண்டேவுடன் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏ.க்களால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதால், சிவசேனா தொண்டர்கள் ஆவேசமாக உள்ளனர். அதிருப்தி எம்எல்ஏ.க்களை அச்சுறுத்தும் வகையில், மகாராஷ்டிராவில் உள்ள அவர்களின் குடும்பத்தினர் மீது அவர்கள் தாக்குதல் நடத்தும் அபாயம் அதிகமாகி இருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். மும்பை, புனே உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை சேர்ந்த அமைச்சர்  ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40க்கும் மேற்பட்ட சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்கொடி   உயர்த்தியுள்ளனர். அவர்கள் அசாம் மாநிலம், கவுகாத்தி ஓட்டலில்  முகாமிட்டு உள்ளனர். இதனால், மகா விகாஸ் கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி  ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. உத்தவ் தாக்கரே, சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தும், அதிருப்தி எம்எல்ஏ.க்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

இதன் காரணமாக, சிவசேனா தொண்டர்கள் ஆவேசம் அடைந்துள்ளனர். அதிருப்தி எம்எல்ஏ.க்களுக்குஎதிராக அவர்கள் வன்முறையில் ஈடுப தொடங்கி உள்ளனர். புனேயில் அதிருப்தி எம்எல்ஏ தானாஜி சாவந்தின் அலுவலகத்தை நேற்று அவர்கள் அடித்து  நொறுக்கினர்.  இதுபோல், பல்வேறு  இடங்களில் ஷிண்டேவின் பேனர்கள் கிழிக்கப்பட்டு வருகிறது. மேலும், அதிருப்தி எம்எல்ஏ.க்களை அச்சுறுத்தும் வகையில், மகாராஷ்டிராவில் உள்ள அவர்களின் குடும்பத்தினர் மீது சிவசேனா தொண்டர்கள் தாக்குதல் நடத்தும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மும்பையில் உள்ள ஷிண்டேவின் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். மும்பையில் ஏற்கனவே  மாநிலங்களவை தேர்தலுக்காக பிறப்பிக்கப்பட்ட 144 தடை  உத்தரவை ஜூலை 10ம் தேதி வரை நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தானேயிலும்  வரும் 30ம் தேதி வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தவ் தாக்கரேவுக்கு செயற்குழு அதிகாரம்

அதிருப்தி எம்எல்ஏ.க்களால் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பாக விவாதிக்க, சிவசேனாவின் தேசிய செயற்குழு நேற்று மும்பையில் நடைபெற்றது. உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,  ‘உத்தவ்  தாக்கரேயின் தலைமையில்தான் சிவசேனா செயல்பட வேண்டும். கட்சிக்கு எதிராக செயல்படும் அதிருப்தியாளர்கள் மீது கடும்  நடவடிக்கை எடுக்க உத்தவ் தாக்கரேவுக்கு செயற்குழு முழு  அதிகாரத்தை வழங்குகிறது.  சிவசேனாவை தவிர வேறு எந்த அமைப்பும், சிவசேனாவின் பெயரையோ, கட்சியின்  நிறுவனரான பாலாசாகேப் பால்தாக்கரேயின் பெயரையோ பயன்படுத்தக் கூடாது,’ என்பது உட்பட 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: