இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட மும்பை தாக்குதல் தீவிரவாதிக்கு பாகிஸ்தானில் 15 ஆண்டு சிறை: சர்வதேச நெருக்கடியால் நடவடிக்கை

லாகூர்: மும்பை தாக்குதலுக்கு  நிதி உதவி அளித்த வழக்கில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 15 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.  கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்காக  நிதி திரட்டிய வழக்கில் லஷ்கர் இ தொய்பா தலைவன் ஹபீஸ் சையத்திற்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய மற்றொரு தீவிரவாதி  சஜித் மஜீத் மிர். இவன் மீதான வழக்கு லாகூர் தீவிரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில், தீவிரவாதத்திற்கு மஜித்  நிதி திரட்டியது நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, அவனுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.  

தீவிரவாதத்துக்கு நிதி உதவி அளித்ததால்  கடந்த 3 ஆண்டுகளாக, சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (எப்ஏடிஎப்) சாம்பல் பட்டியலில் பாகிஸ்தான் உள்ளது. இந்த பட்டியலில் இருந்து இதன் பெயரை நீக்க, தீவிரவாதிகளை ஒடுக்குவது உட்பட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனை பாகிஸ்தான் செயல்படுத்துகிறதா  என்பதை ஆய்வு செய்ய  சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் அதிகாரிகள் விரைவில் பாகிஸ்தான் வர உள்ளனர். இந்நிலையில், தீவிரவாதி சஜித் மஜீத்துக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவன் இறந்து விட்டதாக பாகிஸ்தான் பொய் கதை சொல்லி வந்தது. ஆனால், அதை நம்பாத மேற்கத்திய நாடுகள் அதற்கான ஆதாரங்களை கேட்டனர். அதன் பிறகுதான், பாகிஸ்தான் அரசு தீவிரமாக செயல்பட்டு சஜித்தை கைது செய்தது.

Related Stories: