ஒரு மகளின் கனவு

நன்றி குங்குமம் தோழி

இந்தியச் சமூகத்தில் பிறக்கும் பெண்களில் சிலருக்கு மட்டுமே தங்களின் கனவைப் பின் தொடர்ந்து செல்கின்ற அரிய வாய்ப்பு கிடைக்கிறது. இப்படி கனவைத் துரத்திச் சென்ற பெண்ணின் கதைதான் ‘அங்ரேஜி மீடியம்’. உதய்பூரில் பாரம்பரியமான ஒரு ஸ்வீட் கடையை நடத்தி வருகிறார் சம்பக். குழந்தை பருவத்திலிருந்து சரியான முடிவு எடுக்க முடியாமல் ஒருவித குழப்ப மனநிலையிலே இருப்பவர். அவருக்கு திருமணமானதும் குழப்பத்தில் இருந்து விடுதலை பெறுகிறார்.

மகள் தாரிகாவைப் பெற்றுக்கொடுத்துவிட்டு இறந்துவிடுகிறார் அவருடைய மனைவி. மீண்டும் குழப்ப நிலைக்குள் தள்ளப்படுகிறார் சம்பக். அம்மாவாகவும் அப்பாவாகவும் இருந்து தாரிகாவை வளர்க்கிறார் சம்பக். சுதந்திரமாக வளரும் தாரிகா பிளஸ் 2 படித்து வருகிறாள். இன்னொரு பக்கம் சம்பக்கின் சகோதரர் கோபியும் ஒரு ஸ்வீட் கடையை நடத்தி வருகிறார்.

இருவருடைய கடைகளும் அருகருகே இருப்பதால் பலத்த போட்டி. ஆனால், ஒருவரை இன்னொருவர் விட்டுக்கொடுக்காமல் நெருக்கமாக, உறுதுணையாக

இருக்கிறார்கள். லண்டனுக்குச் சென்று மேற்படிப்பு படிக்க வேண்டும் என்பது தாரிகாவின் கனவு. ஆனால், சம்பக்கிற்கு இதில் அவ்வளவாக விருப்பமில்லை. மகளைப் பிரிய வேண்டும் என்ற கவலை. இருந்தாலும் மகளின் கனவை அவர் நிராகரிப்பதில்லை. இந்நிலையில் பிளஸ் 2வின் இறுதித்தேர்வில் முதல் மூன்று ரேங்க் எடுப்பவர்களுக்கு லண்டனில் படிக்க ஸ்காலர்ஷிப் கிடைக்கும் என்று பள்ளியின் முதல்வர் அறிவிக்கிறார்.

நன்றாக படித்து முதல் ரேங்க் எடுத்தால் அப்பாவுக்கு செலவு வைக்காமல் லண்டனுக்குப் போய் படிக்கலாம் என்று நினைக்கிறாள் தாரிகா. ஆனால், அவள் படிப்பில் அவ்வளவு கெட்டிக்காரி இல்லை. பள்ளியில் நன்றாக படிக்கும் ஒரு மாணவனின் உதவியால், இரவு பகல் பாராமல் படிக்கிறாள். எப்படியாவது மூன்று ரேங்குக்குள் வந்து லண்டனுக்குச் செல்ல வேண்டும் என்று துடிக்கிறாள். ஆனால், அவளால் நான்காவது ரேங்க்தான் எடுக்க முடிந்தது. உடைந்து போகிறாள். சம்பக் அவளைத் தேற்றுகிறார்.

இப்படியான சூழலில் முதல் ரேங்க எடுத்த மாணவி ஐஐடியில் சேர விரும்புவதால் அவள் லண்டனுக்குச் செல்லவில்லை என்ற தகவல் வருகிறது. அதனால் நான்காவதாக வந்த தாரிகாவுக்கு லண்டனுக்குச் செல்ல ஸ்காலர்ஷிப் கிடைக்கிறது. கனவு நிஜமான மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறாள் தாரிகா.

மகளின் கனவு நனவானது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் விரைவில் மகள் வெளிநாடு சென்றுவிடுவாள். இனிமேல் தனியாகிவிடுவோம் என்று கவலைப்படுகிறார் சம்பக். அதை அவர் வெளிக்காட்டுக்கொள்வதில்லை.

ஸ்காலர்ஷிப் கிடைத்த மாணவ-மாணவிகளின் பெற்றோர்களைப் பள்ளி ஆண்டுவிழாவில் சிறப்புரை ஆற்றுவதற்காக அழைக்கிறார் பள்ளியின் முதல்வர். தயக்கத்துடன் சம்பக்கும் கலந்துகொள்கிறார். ஆண்டு விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக ஒரு நீதிபதி வருகிறார். அவர் சம்பக்கின் சகோதரர் கோபியிடம் ஒரு வழக்குக்காக லஞ்சம் வாங்கியவர். நேர்மையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மாணவர்களின் முன்பு சொற்பொழிவை நிகழ்த்துகிறார் நீதிபதி. உண்மையில் நீதிபதி யார் என்பதை மாணவர்கள் ஆசிரியர்களின் முன்னணியில் புட்டுப்புட்டு வைக்கிறார் சம்பக். அதிர்ச்சியடையும் நீதிபதி, சம்பக் பேசிக்கொண்டிருக்கும்போதே அரங்கத்தை விட்டு வெளியேறி விடுகிறார்.

அந்த நீதிபதி பள்ளி முதல்வரின் கணவர். இப்படி எல்லோரின் முன்னிலையில் தன்னுடைய கணவரை அவமானப்படுத்திய சம்பக்கை பழிவாங்க, தாரிகாவின் ஸ்காலர்ஷிப் கடிதத்தைக் கிழித்து வீசுகிறார் முதல்வர். தன்னால்தான் மகளுடைய கனவு உடைந்துபோய்விட்டது என்று வருந்துகிறார் சம்பக். தன் மகளை எப்படியாவது லண்டனுக்கு அனுப்பி படிக்க வைப்பேன் என்று முதல்வரிடம் சவால் விடுகிறார். இந்தச் சவாலில் ஜெயிப்பதற்காக சம்பக் என்னவெல்லாம் செய்தார்... லண்டன் வாழ்க்கை தாரிகாவுக்கு எதைக் கற்றுக்கொடுக்கிறது... என்பதே நெகிழ்வான திரைக்கதை.

உலகின் எந்த மூலைக்குச் சென்று படித்தாலும், வேலை செய்தாலும் சொந்த ஊரில் வாழ்வதைப் போல இருக்காது. குழந்தையாக இருக்கும்போது நம் கைகளைப் பெற்றோர்கள் பற்றிக்கொள்கின்றனர். நமக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருக்கின்றனர். வயதான பிறகும், அவர்களுக்குத் தேவைப்படும்போதும் பிள்ளைகள் பெற்றோர்களின் கைகளைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதை அப்பா - மகள் உறவினூடாக மென்மையாக சித்தரிக்கிறது இந்தப் படம். அத்துடன் ஒரு பெண் தனது கனவை நோக்கிச் செல்லும்போது என்ன மாதிரியான இன்னல்களை எல்லாம் சந்திக்க நேரிடும் என்பதையும் ஆழமாக சொல்கிறது. வழக்கம்போல அற்புதமான ஒரு நடிப்பைத் தந்திருக்கிறார் சம்பக்காக வாழ்ந்த இர்பான் கான். படத்தின் இயக்குநர் ஹோமி அடஜானியா.

தொகுப்பு: த.சக்திவேல்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: