முதல்வரின் முதன்மை திட்டம்

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த மார்ச் 1ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 69வது பிறந்தநாளை முன்னிட்டு, ‘‘நான் முதல்வன்’’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.தமிழகம் பொருளாதாரம், கல்வி மேம்பாட்டில் முதன்மையான மாநிலமாக திகழ வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதனடிப்படையில் நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கமே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் திறமைகளை கண்டறிவது; ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் இளைஞர்களின் சிந்தனை, திறமையை மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதலே ஆகும்.பொதுவாக, பள்ளிகளில் மேல்நிலைக்கல்வி முடித்ததும், அடுத்து என்ன படிக்கலாம் என்கிற சிந்தனை மாணவர்கள் மனதில் ஓடும். இந்த அக்கறையை ஒரு பெற்றோர் மனநிலையில் தமிழக அரசு அணுகுவது பாராட்டிற்குரியது. இத்திட்டத்தின் கீழ் தமிழில் தனித்திறன் பெறுதல், ஆங்கிலத்தில் சரளமாக பேசுதல், எழுதுதல், வேலைக்கான நேர்முகத்தேர்விற்கு தயாராகுதல் உள்ளிட்ட திறன்மிகு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாட்டிலும் வேலைவாய்ப்புக்கான களத்தையும் மாணவர்களுக்கு தமிழக அரசு அமைத்து தருகிறது.‘‘நான் முதல்வன்’’ திட்டத்தின் கீழ் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, உயர்கல்விக்கு ஒளிமயமான பாதைக்கு வழிகாட்டும் ‘‘கல்லூரி கனவு’’ நிகழ்ச்சியை நேற்று சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இவ்விழாவில் முதல்வர் பேசும்போது, ‘‘நான் முதல்வன் திட்டத்தின் ஓர் அங்கமாக ‘‘கல்லூரி கனவு’’ நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. மாணவர்கள் எத்தகைய ஆற்றல் படைத்தவராக உயர்ந்தீர்கள். அதை வைத்து இந்த சமூகத்தை எந்தளவு உயர்த்த முயன்றீர்கள் என்பதுதான் முக்கியம். மாணவர்களை கல்வி, அறிவாற்றல், படிப்பு, மரியாதை, சமத்துவம், பண்பாடு, வழி நடத்தும் திறனை கொண்டவர்களாக உயர்த்தும் திட்டம்தான் நான் முதல்வன் திட்டம். அரசு, அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தவர்கள் நிச்சயம் முன்னேற முடியும். இந்திய துணைக்கண்டத்தில் இருக்கிற மாநிலங்களில், தமிழ்நாட்டிற்கு இணையான கல்வி கொள்கை எந்த மாநிலத்திலும் இல்லையெனலாம். அதை மேம்படுத்தி கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்.

இத்திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடக்க உள்ளது. மாணவர்கள் உயர் கல்வியை பெறுவதற்கான வழிகாட்டி தான் ‘‘கல்லூரி கனவு’’ நிகழ்ச்சி. வரும் 2026ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் 2 மில்லியன் இளைஞர்கள் திறன் மேம்பாடு அமைய வேண்டும்’’ என பேசி உள்ளார்.

மாணவர்களின் கல்வியறிவை வளர்க்கும் நோக்கத்தில் செயல்பட்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அதே நேரம், படித்து முடித்த மாணவர்களின் வேலை வாய்ப்பை பெருக்கவும், பொருளாதார தன்னிறைவு மாநிலமாக தமிழகம் திகழவும் வேண்டுமென தொடர்ந்து பல்வேறு தொழில் துறை, முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தி வருகிறார். ஏற்கனவே நடந்து முடிந்த மாநாடுகளில் சுமார் 1 லட்சம் தமிழக இளைஞர்கள் பயன் பெறும் வகையில், பல நூறு கோடி மதிப்பில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், வரும் 2030ம் ஆண்டிற்குள் தமிழகம் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டுமென்ற இலக்கோடு, திமுக அரசு செயல்பட்டு வருகிறது. அதற்கான வளர்ச்சிப்பாதையில் தமிழக அரசு பயணிப்பது பாராட்டிற்குரியது.

Related Stories: