நாளுக்கு நாள் பரபரப்பாகும் சிவசேனா மோதல் புதிய அணி தொடங்கினார் ஷிண்டே: 16 அதிருப்தி எம்எல்ஏ.க்களுக்கு கட்சி நீக்க நோட்டீஸ்

மும்பை:  உங்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்று கேட்டு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி  அணியை சேர்ந்த 16  எம்.எல்.ஏக்களுக்கு துணை சபாநாயகர் நோட்டீஸ்  அனுப்பியுள்ளார். இந்நிலையில், சிவசனோ பாலசாகேப் என்ற பெயரில்  அதிருப்தி அணியினர் புதிய கட்சியை தொடங்கியுள்ளனர்.மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வரும் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவில் பிளவு ஏற்பட்டுள்ளது. அமைச்சர் ஏக்நாத்  ஷிண்டே தலைமையில் 40க்கும் மேற்பட்ட சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ.க்கள் அசாமில் முகாமிட்டு இருப்பதால், ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி பாஜவுடன் கூட்டணி ஆட்சி அமைக்கும்படி உத்தவ்  தாக்கரேவுக்கு இவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.

இந்நிலையில், அடுத்தக் கட்டமாக ‘சிவசேனா பாலசாகேப் கட்சி’ என்று  தனது அணிக்கு ஷிண்டே நேற்று பெயர் சூட்டினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சிவசேனா  கட்சியின்  சட்டப்பேரவை குழு  தலைவராக இருந்த ஷிண்டேவின் பதவி பறிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சவுத்ரி நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும், ஷிண்டேவுடன் உள்ள எம்எல்ஏ.க்களில் 16 பேரை கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி தகுதி  நீக்கம் செய்வது தொடர்பாக விளக்கம் கேட்டு, துணை  சபாநாயகர் நர்கரி ஜிர்வால் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இதற்கு நாளைக்குள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். ஆனால், தங்கள் அணியில் 38க்கும் மேற்பட்ட சிவசேனா எம்எல்.ஏ.க்கள் இருப்பதால், கட்சி  தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது ஷிண்டே அணி அறிவித்துள்ளது. இதனால், மகாராஷ்டிரா அரசியல் நாளுக்குள் நாள் பெரும் பரபரப்பாகி வருகிறது.

< ஒரு கட்சியை சேர்ந்த மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏ.க்கள் தனியாக செயல்பட்டால், அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க  முடியாது.

< இதன்படி, சிவசேனாவின் மொத்த எம்எல்ஏ.க்களில் 37 பேர் ஷிண்டேவிடம் இருக்க வேண்டும். ஆனால், அவர் தனது அணியில் 38 எம்எல்ஏ.க்கள் இருப்பதாக கூறியுள்ளார்.

Related Stories: