திரவுபதி முர்மு குறித்து விமர்சனம் ராம்கோபால் வர்மா மீது பாஜ நிர்வாகிகள் புகார்

சித்தூர்: ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு குறித்து தரக்குறைவாக டிவிட்டரில் விமர்சனம் செய்த திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது, சித்தூர் முதலாவது காவல் நிலையத்தில் பாஜ கட்சி நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி, பாஜ சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திரவுபதி முர்முவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஆனால், நேற்று முன்தினம் இரவு தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது டிவிட்டர் பக்கத்தில், மகாபாரதத்தில் திரவுபதிக்கு நடந்த சம்பவத்தை கார்ட்டூன் படம் போல் சித்தரித்து ஆபாசமான வார்த்தைகளில் பதிவு செய்துள்ளார்.

இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். திரவுபதி முர்மு ஜார்கண்ட் மாநில கவர்னராகப் பதவி வகித்தவர். அவர் ஆதிவாசி குடும்பத்தைச் சேர்ந்தவர். அரசு ஆசிரியராக சிறப்பாகப் பணியாற்றியவர். அப்படிப்பட்ட திரவுபதி முர்முவை டிவிட்டரில் தரக்குறைவாகப் பதிவு செய்ததை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.  ஜனாதிபதி வேட்பாளரை தனது இணையதள பக்கத்தில் தரக்குறைவாகப் பதிவு செய்த ராம்கோபால் வர்மா மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்டும்.

Related Stories: