பள்ளி மாணவர்களுக்கிடையே வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் விதமாக ஊஞ்சல், தேன் சிட்டு இதழ் திட்டத்திற்கு ரூ.7.15 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பள்ளி மாணவர்களுக்கிடையே வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் விதமாக ஊஞ்சல், தேன் சிட்டு இதழ் திட்டத்திற்கு ரூ.7.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

2022-23ம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், ‘‘மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கவும் அவர்களின் உள்ளார்ந்த படைப்புத் திறன்களை வெளிப்படுத்தும் வகையிலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு ஊஞ்சல் இதழும், உயர்வகுப்பு மாணவர்களுக்கு தேன்சிட்டு இதழும் மாதமிருமுறை வெளியிடப்படும். மேலும் ஆசிரியர்களுக்கான படைப்புத் தளத்தை உருவாக்கவும் சிறந்த கற்றல் கற்பித்தல் முறைகளைப் பரிமாறிக் கொள்ளவும் கனவு ஆசிரியர் என்ற மாத இதழ் வெளியிடப்படும். சுமார் ரூ.7 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் ’’ என்று தெரிவித்திருந்தார்.

அமைச்சரின் அறிவிப்பினை 2022-23ம் கல்வியாண்டிலிருந்து தொடர்ந்து செயல்படுத்தவும், இவ்வாண்டிற்கு தேவைப்படும் நிதி 7 கோடியே 15 லட்சத்து 32 ஆயிரத்து 634 ரூபாயை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக நிதியிலிருந்து செலவிடவும், எதிர்வரும் ஆண்டுகளில் செலவினங்களில் ஏற்படும் மாற்றங்களையும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக நிதியிலிருந்து மேற்கொள்ள அனுமதி அளித்தும் அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: