விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பூத்து குலுங்கும் மஞ்சள் நிற கொன்றை பூக்கள்: பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ச்சி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பூத்து குலுங்கும் மஞ்சள் நிற கொன்றை பூக்கள் பொதுமக்களை கவர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாக அலுவலக நுழைவு வாயிலின் இருபுறங்களில் உள்ள கொன்றை மரங்களில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இத்தகைய கொன்றை மரங்களில் பல்வேறு வகைகள் உள்ளன. இவற்றில் கனிக்கொன்றை எனப்படும் சரக்கொன்றை மரங்கள் விசேஷமானவை ‘கேஷியா பிஷ்டுல்லா’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த மரங்களில் தங்கமழை பொழிவது போன்று பூக்கள் கொத்துக் கொத்தாக பூத்துக் குலுங்கும்.

இதனால் இந்த மரப் பூக்களை ‘கோல்டன் ஷவர்’  என்று வர்ணிக்கப்படுவதும் உண்டு. இளவேனில் காலம் அல்லது வசந்த காலத்தில் பூத்துக் குலுங்கும் இந்த மரங்கள் சித்திரை மாதப் பிறப்பை வரவேற்கும் வகையில் இருப்பது தனிச்சிறப்பாகும். இந்த வகை மரங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளின் முன்பும், கோயில்களிலும் அதிக அளவிலும் காணப்படுகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்திலும், கேரளாவிலும் சித்திரை விஷு நிகழ்ச்சியில் கனிக்கொன்றை பூக்களுக்கு முக்கிய இடம் உண்டு. மஞ்சள் நிற கனிக்கொன்றை பூக்களையும் வைத்து படையலிட்டால் அனைத்து விதமான ஐஸ்வர்யங்களும் அமையும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

அத்தகைய பூக்களின் மரங்கள் தற்போது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாக அலுவலக நுழைவு வாயிலின் இருபுறங்களிலும் பூத்துக் குலுங்குவது மக்களின் மனதை கவர்ந்துள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வரும் பொதுமக்கள் அம்மரங்களின் நிழலில் அமர்ந்து பூக்களின் வண்ணங்களை தினந்தோறும் ரசித்து அவரவர் செல்போனில் தாங்கள் நிற்பதுபோல் புகைப்படமும் எடுத்துக் கொள்வது வழக்கமாகி உள்ளது.

Related Stories: