நாமக்கல் மாவட்டத்தில் அரசு பஸ்சில் முதல் முறையாக பெண் கண்டக்டர் நியமனம்: ஆர்வமுடன் பணியாற்றுவதாக நெகிழ்ச்சி

சேலம்: சேலம் கோட்டம் நாமக்கல் மாவட்டத்தில் அரசு பஸ்சில் முதல் முறையாக பெண் கண்டக்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம், சென்னை, விழுப்புரம், கும்பகோணம், மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி என எட்டு கோட்டங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த எட்டு கோட்டங்களிலும் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் கோட்டம் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கியது.

இம்மாவட்டங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த வகையில் பொதுவாக டிரைவர், கண்டகடர் பணி என்பது நூறு சதவீதம் ஆண்கள் பணிகளாக இருந்தது. சமீப காலமாக எல்லா துறைகளிலும் பெண்களும் கால் பதித்து வருகின்றனர். விமானம், ரயில், சரக்கு லாரி, ஆட்ேடா, பஸ் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டி வருகின்றனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் அரசு டவுன் பஸ்சில் கண்டக்டராக பணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த பழனியப்பன் புதூரை சேர்ந்தவர் குமார். இவர் தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இளையராணி (34). இவர் ராசிபுரம்- சேலம் வழித்தடத்தில் இயங்கும் அரசு பஸ்சில் கண்டக்டராக பணி செய்கிறார்.

இதுகுறித்து இளையராணி கூறியதாவது: எனது தந்தை முனியப்பன் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பணிமனையில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வந்தார். எனது கணவர் குமார். எங்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். எனது தம்பி இளையராஜா படித்துக்கொண்டிருக்கிறார். எனது தந்ைத முனியப்பன் கடந்த 2010ம் ஆண்டு காலமானார். எனது தம்பி படித்துக்கொண்டிருப்பதால், வாரிசு வேலை கேட்டு அரசு போக்குவரத்து கழகத்தில் விண்ணப்பம் செய்து இருந்தேன். என்னைபோல் பத்து பேர் வாரிசு வேலை கேட்டு இருந்தனர். இதில் பணிக்காலத்தின்போது உயிரிழந்த எனது தந்தை பணிக்கு இணையாக எனக்கு கண்டக்டர் பணி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதமாக ராசிபுரம் பணிமனைக்குட்பட்ட ராசிபுரம்- சேலம் (எண்.52) வழித்தடத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறேன். காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ச்சியாக பஸ்சுக்குள் அங்கும், இங்கும் நடந்தபடி பயணச் சீட்டை வழங்குவது, பஸ் ஸ்டாப்புகளில் பயணிகளுக்கு அழைப்பு விடுப்பது என சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறேன். என்னுடன் சேர்ந்து பத்து பேருக்கு வாரிசு வேலை வழங்கப்பட்டது. அதில் எனக்கு கண்டக்டர் பணி கொடுக்கப்பட்டது. இப்பணிக்காக ஒரு மாதம் பயிற்சி பெற்றேன். தற்போது வேலை எளிதாகிவிட்டால் ஆர்வத்துடன் பணியாற்றி வருகிறேன். இவ்வாறு இளையராணி கூறினார்.

Related Stories: