ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடியிடம் ஆதரவு கோரிய யஷ்வந்த் சின்கா

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடியிடம் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்கா ஆதரவு கோரினார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவதால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பத்றகான தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடக்கிறது. இதில் பாஜ தலைமையிலான தே.ஜ கூட்டணி சார்பில் ஒடிசாவை சேர்ந்த பழங்குடி பிரிவை சேர்ந்த பாஜ பெண் தலைவர் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவர் நேற்று, தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்கா நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் பணிகளை தொடங்கி விட்டார். அந்த வகையில் பிரதமர் மோடியை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரது ஆதரவை கேட்டு கொண்டார். அத்துடன் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜனதா மூத்த தலைவரும், தனது வழிகாட்டியுமான எல்.கே.அத்வானி ஆகியோரிடமும் தன்னை ஆதரிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய யஷ்வந்த் சின்கா, தன்னை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேர்வு செய்தபோது அவரது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அளித்த உறுதிமொழியை நினைவுபடுத்தினார். இதற்கிடையே எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள யஷ்வந்த் சின்கா, அவர்களின் ஆதரவை முறைப்படி கேட்டு கொண்டார்.

Related Stories: