×

இந்து சமய அறநிலையத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் திருக்கோயில் பெருந்திட்டப் பணிகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் திருக்கோயில் பெருந்திட்டப் பணிகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (24-6-2022), தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத் துறையால் மேற்கொள்ளப்பட்டுவரும் திருக்கோயில் பெருந்திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

 இந்தக் கூட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறை தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட சில அறிவிப்புகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  ஆய்வின்போது, பின்வரும் விவரங்கள் துறையால் தெரிவிக்கப்பட்டன. தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின்போது, ‘ஆண்டு முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்லும் பழநி, திருவண்ணாமலை, திருச்செந்தூர், இராமேசுவரம், திருத்தணி ஆகிய திருக்கோயில்களில் ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் ரூ.250 கோடியில் மேம்படுத்தப்படும்’ என அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இவற்றிற்கான பெருந்திட்ட வரைவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா, பங்குனி உத்திரத் திருவிழா, வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை போன்றவை முக்கிய திருவிழாக்களாகும்.  இத்திருக்கோயிலில் சாதாரண நாட்களில் 25 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட பக்தர்களும், வார விடுமுறை நாட்களில் 50 ஆயிரம் முதல்
ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும், முக்கிய விழாக்காலங்களில்
4 இலட்சம் முதல் 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் வருகைபுரிகின்றனர்.  இத்திருக்கோயிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், நெறிப்படுத்தப்பட்ட பிரகாரம், ஒழுங்கமைக்கப்பட்ட நிழல் மண்டபம், வெளிப்படையான நுழைவாயில்கள், கட்டமைப்பில் இருக்கும் பிரச்சனைகளை சரிசெய்தல் மற்றும் புதுப்பித்தல், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் என மலைக்கோயில், அடிவாரம், பழனி மலை மற்றும் இடும்பன் மலை, இடும்பன் குளம் மற்றும் சண்முகா நதி உள்ளிட்ட பகுதிகளில் 153 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ள பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, ஐந்தாம்படை வீடான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு சாதாரண நாட்களில்  5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும், மாத சஷ்டி மற்றும் கிருத்திகை நாட்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும், ஆடிக் கிருத்திகையின் போது
5 இலட்சம் பக்தர்களும் வருகைபுரிகின்றனர்.  இந்த நிலையில், அங்கு வரும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், திருக்கோயில் வளாகம், அன்னதான வளாகம், வாகனம் நிறுத்தும் வளாகம்,  மலைப்படிக்கட்டுக்கள் மேம்பாட்டு திட்டங்கள், இளைப்பாறும் மண்டபங்கள், மலையடி மேம்பாட்டுத் திட்டங்கள் (சரவணப்பொய்கை, வாகன நுழைவு வளாகம், வணிக மற்றும் பக்தர்கள் ஓய்வு வளாகம்), மலைப்பாதை (கூடுதல் பாதை மற்றும் புதிய மலைப்பாதை) உள்ளிட்ட பணிகளை 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளும் வகையில் பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பெருந்திட்ட வரைவுகளை ஆய்வு செய்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இப்பணிகளைச் செம்மையாக மேற்கொள்ள உரிய ஆலோசனைகளை துறை அலுவலர்களுக்கு வழங்கினார். இக்கூட்டத்தில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்
திரு. பி.கே.சேகர்பாபு, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர், திரு. பி. சந்தரமோகன் இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு. ஜெ. குமரகுருபரன் இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) திரு. இரா. கண்ணன் இ.ஆ.ப., ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags : Chief of ,Tamil ,Nadu ,Chief of Tamil Nadu ,Hindu Religious Foundation ,K. Stalin , Department of Hindu Religious Affairs, Temple Master Project, Study of Tamil Nadu Chief Minister MK Stalin
× RELATED திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து...