தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் 30 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்கும் 30 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டதை அடுத்து, விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நேற்றைய நிலவரப்படி, தூத்துக்குடியில் 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 100க்கு கீழே பதிவாகி வந்த தினசரி தொற்று பாதிப்பு கடந்த இரண்டு வாரமாக அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது.

நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,359 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 616 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 266 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 71 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் பயிலும் 200 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 30 மாணவ, மாணவிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் பாதிப்பின் தீவிரம் குறைவான அளவே இருப்பதால் அவர்கள் கல்லூரி விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே தொற்று அதிகரிப்பால் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இதுவரை மூடிக்கிடந்த காய்ச்சல் மற்றும் தொற்று பிரிவு மீண்டும் திறக்கப்பட்டு, அங்கு செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.   

Related Stories: