காதல் ஜோடி ஓட்டம் காதலன் தந்தைக்கு கத்திக்குத்து பெண்ணின் தந்தை வெறிச்செயல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே காதல் ஜோடி வீட்டை விட்டு ஓடிய விவகாரம் தொடர்பாக இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடந்தபோது, காதலனின் தந்தையை பெண்ணின் தந்தை கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி அடுத்த பெரியசிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரி (52), விவசாயி. இவரது மகன் மணிகண்டனும், வாணவரெட்டி கிராமத்தை சேர்ந்த எம்ஜிஆர் மகள் மணிமொழியும் காதலித்து வந்தனர்.

கடந்த 22ம்தேதி மாலை காதல் ஜோடி வீட்டில் இருந்து ஓடிவிட்டனர். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து விளம்பார் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது வீட்டில் இருதரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போதும் இருதரப்பினருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை எம்ஜிஆர் மறைத்து வைத்திருந்த கத்தியால் காதலன் மணிகண்டனின் தந்தையான மாரி வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த மாரியை அவரது உறவினர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசில் மாரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணின் தந்தை எம்ஜிஆரை (42) அதிரடியாக கைது செய்தனர்.

Related Stories: