மதுரை சாந்தமங்கலம் ஆவின் சந்திப்பில் சாலையோரம் செயல்பட்டு வந்த பிரபல பன் பரோட்டா கடைக்கு சீல்..!!

மதுரை: மதுரையில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்ததாக எழுந்த புகாரில் கடைக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் சீல் வைத்தனர். மதுரை மாவட்டம் சாத்தமங்கலம் ஆவின் பால் பண்ணை அமைந்துள்ள சந்திப்பில் சாலையோரத்தில் பிரபலமான மதுரை பன் பரோட்டா கடை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைக்கு சொந்தமான பகுதியில் சாலையை ஆக்கிரமித்து உணவகத்தை நடத்தி வந்ததாக நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி சார்பிலும் நோட்டீஸ் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு சுகாதாரமற்ற உணவுகளை விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத் துறையினருக்கு புகார் வந்தது.

இதனையடுத்து, மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மதுரை பன் புரோட்டோ கடையில் இன்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, கடையில் சுகாதாரமற்ற முறையில் பரோட்டா உள்ளிட்ட உணவுப்பொருட்களை தயாரித்தது தெரியவந்தது. தொடர்ந்து, கடைக்கு சீல் வைத்து நோட்டீஸ் அளித்தனர். மேலும், தடையை மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துச் சென்றனர். இதுகுறித்து மாவட்ட நியமன உணவு பாதுகாப்பு அதிகாரி கூறியதாவது, மதுரை பன் பரோட்டா கடையில் சுகாதாரமற்ற முறையில் உணவு வழங்குவதாக வாட்ஸ்அப் புகார்கள் எங்களுக்கு வந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில், சுகாதாரமற்ற முறையில் உணவு தயார் செய்வதை நிறுத்திக் கொண்டு, உரிய பாதுகாப்பு வழிமுறைகளோடு உணவு தயார் செய்ய வேண்டும் என்று இரண்டு முறை நோட்டீஸ் அளித்து, 30 நாட்கள் அவகாசம் வழங்கினோம். ஆனால், கடை உரிமையாளர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று அக்கடைக்கு உணவு பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் சீல் வைத்துள்ளோம். மேலும், சுகாதாரமற்ற முறையில் உணவு வழங்கினால் அந்த ஓட்டல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மதுரையில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பிரபல பன் பரோட்டா கடையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் உண்டு வந்த நிலையில், அங்கு தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக கூறி உணவுப் பாதுகாப்புத்துறை சீல் வைத்த சம்பவம் மதுரை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: