ஊராட்சி தலைவரின் கணவர் மர்மச்சாவு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள பூம்பிடாகை ஊராட்சி மன்றத்தலைவர் நிரஞ்சனா (30). இவரது கணவர் பெரியசாமி (38). இவர், கடந்த 22ம் தேதி இரவு டூவீலரில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. கடந்த இரண்டு நாட்களாக உறவினர்கள் வீடுகள் மற்றும் பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இதனிடையே, எஸ்.நாங்கூர் அருகே பீக்குளம் பகுதியில், ஆட்கள் நடமாட்டம் இல்லாத வயல்வெளியில், உடலில் காயங்களுடன் ஒருவர் இறந்து கிடப்பதாக அ.முக்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்ததில், இறந்து கிடந்தது பூம்பிடாகை ஊராட்சி தலைவர் நிரஞ்சனாவின் கணவர் பெரியசாமி என தெரிய வந்தது. உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்தன. போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து, பெரியசாமி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலையா என விசாரித்து வருகின்றனர்.

Related Stories: