அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி உதவித்தொகை பெறும் மாணவிகள் விவரம் பதிவேற்றம்: இன்று முதல் 30-ம் தேதி வரை மேற்கொள்ள உத்தரவு

சேலம்: தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் படித்து, உயர்கல்விக்கான மாதாந்திர உதவித்ெதாகை பெறும் மாணவிகளின் விவரங்களை, இன்று முதல் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வந்த, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், உயர்கல்வி உறுதி திட்டமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவிகள், உயர்கல்விக்கு செல்லும் போது அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகையாக வழங்கப்படவுள்ளது. நடப்பாண்டு முதலே இதனை செயல்படுத்தும் விதமாக, மாணவிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி, கலை மற்றும் அறிவியல் கல்வி இளநிலை பயிலும் மாணவிகளுக்கான மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தினை செயல்படுத்த உரிய வழிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும்.

தற்போது, இத்திட்டத்தினை செயல்படுத்த ஏதுவாக, https://penkalvi.tn.gov.in என்ற முகவரியில் இணைய தளம் துவங்கப் பட்டுள்ளது. இந்த இணைய தளத்தில், இத்திட்டத்தில் பயன்பெறும் மாணவிகளின் விவரங்களை இன்று (25ம் தேதி) முதல் வரும் 30ம் தேதிக்குள் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உடனடியாக பதிவிடப்பட வேண்டும். அரசுப் பள்ளிகளில் (அரசுப்பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகள், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், வனத்துறை பள்ளிகள் மற்றும் பிற அரசுத்துறைகளால் செயல்படுத்தப்படும் பள்ளிகள்) 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்று, அரசு, அரசு உதவி பெறும், சுயநிதிக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை தொடரும் மாணவிகள் இத்திட்டத்தில் பயன்பெறுவர்.

இத்திட்டத்திற்கென இளநிலை பயிலும் மாணவிகளிடமிருந்து, அவர்களது சுய விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் பயின்ற அரசுப்பள்ளி விவரங்கள் கோரப்படுகின்றன. மாணவிகள் தங்களது ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் ஆகிய ஆவண நகல்களை கொண்டுவர அறிவுறுத்தல் வேண்டும்.

இந்த விவரங்கள் சார்ந்த மாணவிகள் மற்றும் பொறுப்பாசிரியர்கள் மூலம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். சரியான விவரங்கள் பதிவேற்றம் செய்வதை, சார்ந்த துறை தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும். மாணவிகள் பதிவு செய்யும் செல்போன் எண்ணிற்கு ஓடிபி அனுப்பப்படும் என்பதால், செல்போனை தவறாமல் கொண்டு வரவேண்டும். இத்திட்டத்தில் பயன்பெறும் மாணவிகளுக்கு தகவல் அளித்து, கல்லூரிக்கு வரவழைத்து தேர்வு நடைபெற்றாலும் தேர்வு முடித்த பிறகு (முற்பகல் அல்லது பிற்பகல்) இந்த விவரங்களை விரைந்து பதிவேற்றம் செய்தல் வேண்டும்.

இணைய வசதி உள்ள மாணவிகள் தாங்களாகவே, தங்களது கைபேசி அல்லது கணினி வாயிலாக மேற்காண் இணைய முகவரியைப் பயன்படுத்தி தங்களது விவரங்களைப் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இதனை சம்மந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் உறுதி செய்து கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இத்திட்டத்தினை தொழில்நுட்பக் கல்வி ஆணையர் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்குநர் அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி கல்லூரி வாரியாக கண்காணித்து, உடனுக்குடன் விவரங்கள் பதிவிடப்படுவதை உறுதி செய்து, அனைத்து மாணவிகளின் விவரங்களும் வரும் 30ம் ேததிக்குள் பதிவிடப்பட்டிருக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்குள், கல்லூரி வாரியாக பதிவிடப்பட்ட மாணவியரின் எண்ணிக்கை குறித்த அறிக்கையினை தவறாது அரசுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: