கால்நடை மருத்துவமனையில் மருந்து, மாத்திரை தட்டுப்பாடு: விவசாயிகள் குற்றச்சாட்டு

திருத்தணி: திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கதிர்வேல் தலைமையில் நடைபெற்றது. அனைத்து துறை அலுவலர்கள், விவசாயிகள் என 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், திருத்தணி கோட்டத்தில் மொத்தம் 20 நேரடி கொள்முதல் நிலையங்கள் தான் உள்ளன. இதனால் விவசாயிகள் நெல் மூட்டைகள் குறித்த நேரத்தில் கொள்முதல் செய்யாததால் மழையில் நனைந்து வீணாகிறது. முன்பதிவு செய்த விவசாயிகளின் நெல் மூட்டைகள் எடுப்பதற்கு பல நாட்கள் ஆகிறது.

கொள்முதல் நிலையங்கள் அதிகரிக்க வேண்டும். ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்க வேண்டும். கரும்பு வெட்டி அனுப்பிய  விவசாயிகளுக்கு திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் 29 கோடி ரூபாய் நிலுவை தொகை வைத்துள்ளது. அவற்றை உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகளின் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும். இவ்வாறு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இந்த கூட்டத்தில், 30க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.முன்னதாக விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகள் பட்டா மாற்றம், சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் போன்ற பிரச்னைகளை தெரிவிக்கின்றனர். ஆனால் வருவாய் துறையில் தாசில்தார், துணை தாசில்தார் யாரும் வரவில்லை. ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னை, சுகாதார சீர்கேடு போன்ற ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளிடம் புகார்தெரிவிக்கின்றனர். ஆனால் அந்த துறையில் இருந்து ஒருவரும் வரவில்லை.

இரண்டு துறைகளிலும் யாரும் வராததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். ‘’இனிவரும் காலங்களில் நடைபெறும் கூட்டத்தில் கட்டாயம் வருவாய், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கலந்துக் கொள்ள வேண்டும். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துக் கொள்ள வேண்டும்’’ என கோரிக்கை வைத்தனர். ‘தங்களது வீடுகளில் வளர்க்கும் ஆடு, மாடு, கோழிகள் சிகிச்சைக்கு அழைத்து செல்லும்போது மருந்தகம், கிளை நிலையங்களில் மாத்திரைகள், ஊசிகள் ஸ்டாக் இல்லை என கூறி, தனியார் மருந்து கடையில் வாங்கி வாருங்கள்’’ என விவசாயிகளிடம் கூறுகின்றனர்.

எனவே, தட்டுப்பாடின்றி மருந்து, மாத்திரை கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர். மேலும் மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை கால்நடை மருந்தகம், கிளை நிலையம் திறந்து சிகிச்சை அளிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

Related Stories: