நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் பிளாஸ்டிக் மாற்று பொருள் கண்காட்சி

கூடுவாஞ்சேரி: நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பதிலாக மாற்று பொருட்கள் பற்றிய கண்காட்சியை இன்று காலை கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பொன்னையா பங்கேற்று துவக்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.

இந்நகராட்சியில் நகர்ப்புற தூய்மை மக்கள் இயக்கம் சார்பில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக, மாற்று பொருட்கள் பற்றிய கண்காட்சியை இன்று காலை கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா பங்கேற்று துவக்கி வைத்தார். இக்கண்காட்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை குறிப்பு காணொலி காட்சி காண்பிக்கப்பட்டது. பின்னர் மஞ்சள் பை, மறுசுழற்சி செய்யப்பட்ட மாற்று பொருட்கள், துண்டு பிரசுரங்களை வழங்கி, மக்களிடையே நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பொன்னையா விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதையடுத்து, 26வது வார்டில் வீடுகள்தோறும் குப்பைகளை தரம் பிரித்தல், மக்கும் குப்பைகளை உரமாக்கும் செயல்முறை குறித்து நகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

மேலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவதற்காக பச்சை மற்றும் நீல நிறம் பக்கெட்டுகளை இல்லத்தரசிகளுக்கு வழங்கப்பட்டது. 25வது வார்டு, லால்பகதூர் சாஸ்திரி தெருவில் குப்பை கொட்டும் இடத்தை சுத்தம் செய்து, வண்ணக்கோலங்கள் போடப்பட்டு, ஆங்காங்கே தெருக்களில் குப்பைகளை வீசக்கூடாது என விழிப்புணர்வை ஏற்படுத்தி, பொதுமக்களுக்கு நகராட்சி ஊழியர்கள் துண்டு பிரசுரம் விநியோகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் எம்கேடி.கார்த்திக், துணை தலைவர் ஜி.கே.லோகநாதன், நகராட்சி ஆணையாளர் இளம்பரிதி, வார்டு கவுன்சிலர்கள் பரிமளா கணேசன், ரவி, ஜெயந்தி ஜெகன், திவ்யா சந்தோஷ்குமார், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் சசிகலா, மண்டல செயற்பொறியாளர் கருப்பையா ராஜா, துப்புரவு ஆய்வாளர் காளிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: