புதுச்சேரி ஜிப்மரில் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: துணைநிலை ஆளுநர் தமிழிசை வலியுறுத்தியதையடுத்து நிகழ்வின் இடையே இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து..!

புதுச்சேரி: புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனை நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜிப்மர் சர்வதேச பொது சுகாதார பள்ளியை தேசத்திற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச பொது சுகாதார பள்ளியை திறந்து வந்தார். இந்த நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்த நிலையில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் மருத்துவ துறைக்கான தன்வந்திரி வாழ்த்து பாடல் மட்டும் பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து உடனடியாக பாட வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழசை மற்றும் புதுச்சேரி சபாநாயகர் செல்வம் ஆகிய இருவரும் ஜிப்மர் இயக்குனரை கேட்டுக் கொண்டார். இதனையடுத்து நிகழ்ச்சியின் நடுவில் தமிழ்த்தாய் வாழ்த்து இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டு, இசைக்கப்பட்டது. ஒன்றிய அரசின் நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தாலும் துணை நிலை ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்து பாட எடுத்த நடவடிக்கை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை; இந்த தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படமால் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது தெரியாமல் நடந்த தவறு என்றும், இதனை பெரிதுபடுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் இனிவரும் காலங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அனைத்து ஒன்றிய அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Related Stories: