4 நாள் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 28ம் தேதி வரை நான்கு நாள் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வருகிற 28ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அதேபோல் இன்று முதல் வருகிற 28ம் தேதி வரை லட்சத்தீவு பகுதி, கேரளா, கர்நாடகா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: