வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை-மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

வில்லியனூர் :  புதுச்சேரி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை அடித்துக் கொன்று நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி சேதராப்பட்டு காமராஜர் வீதியை சேர்ந்த சின்னையன் மனைவி உண்ணாமலை (75). இவருக்கு ஆதிகேசவன், நாராயணமூர்த்தி ஆகிய 2 மகன்களும், கவுரி, ராணி, கண்ணகி ஆகிய 3 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். மூதாட்டி உண்ணாமலை மட்டும் தனியாக வசித்து வந்தார்.

இவர் தனது வீட்டில் வடஇந்தியர்களை வாடகைக்கு விட்டு, அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்தார். மேலும் இவர் மாடு வைத்துக்கொண்டு கூட்டுறவு ெசாசைட்டியில் பால் ஊற்றி, அதில் வரும் வருமானத்தை கொண்டும் குடும்ப செலவுக்கு பயன்படுத்தி வந்தார். கிடைக்கும் வருமானம் மூலம் தங்கச்செயின், மூக்குத்தி, கம்மல் என 10 சவரன் நகைகளை எப்போதும் அணிந்திருப்பார்.

 இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இவர் கூட்டுறவு சொசைட்டியில் பால் ஊற்றுவதற்கு உண்ணாமலை வரவில்லை. வீட்டு வாசலிலும் தண்ணீர் தெளிக்கவில்லை. 2 நாட்களாக அவர் வீட்டிலிருந்து வெளியே வராததால் அவரது உறவினர்கள் நேற்று மாலை 4 மணியளவில் வீட்டுக்கு உள்ளே  சென்று பார்த்தபோது உண்ணாமலை ரத்தக்காயங்களுடன் குப்புற கவிழ்ந்தபடி இறந்து கிடந்துள்ளார்.

மேலும் அவர் அணிந்திருந்த 10 பவுன் நகைகளும் காணவில்லை. இதையடுத்து அவரது மகன், மகள் ஆகியோர் சேதராப்பட்டு காவல் நிலைத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது, உண்ணாமலை முகத்தில் குத்தப்பட்டு ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இதுகுறித்து சேதராப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து, மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். நகைகள் இல்லாததால் நகைக்காக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் வேறு ஏதேனும் காரணமா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: