டிரைவர், நடத்துனர்கள் வேலை நிறுத்தம் பிஆர்டிசி பஸ்கள் 2வது நாளாக ஓடவில்லை-பொதுமக்கள், மாணவர்கள் பாதிப்பு

புதுச்சேரி : புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்துக் கழகம்   (பிஆர்டிசி) சார்பில் கடலூர், விழுப்புரம், சென்னை மட்டுமின்றி குமுளி,   மாகே உள்ளிட்ட வெளியூர்களுக்கு நீண்டதூர பேருந்துகளும், உள்ளூரில் டவுன்   பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. பிஆர்டிசியில் 200 நிரந்தர டிரைவர்கள்,   நடத்துனர்கள் என 270க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். இதனிடையே   முத்தியால்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதிக்கு சென்ற பிஆர்டிசி பேருந்து, ஏழை மாரியம்மன் கோயில் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி ஏற்றியது. அப்போது   ஏற்பட்ட டைமிங் தகராறில் தனியார் பஸ் டிரைவர், பிஆர்டிசி டிரைவரை கட்டையால்   தாக்கியதாக கூறப்படுகிறது.

 இதில் காயமடைந்த அவர், அரசு   மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல், வில்லியனூரில்   டைமிங் தகராறில் பிஆர்டிசி ஊழியர்கள் தாக்குதலுக்குள்ளாகினர். பிஆர்டிசி   ஒப்பந்த டிரைவர்கள் தனியார் பேருந்து டிரைவர்களால் தொடர்ந்து தாக்கப்படுவதை   கண்டித்தும், நிர்வாகம் இதில் தலையிட்டு சட்டப்பூர்வ நடவடிக்கைகளை   எடுக்கக் கோரியும் பிஆர்டிசி டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள் நேற்று   முன்தினம் மாலை முதல் திடீரென ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

ஊழியர்களின்   வேலை நிறுத்தத்தால் குமுளி, மாகே, திருப்பதி, பெங்களூரு உள்ளிட்ட நீண்டதூர   பேருந்துகளும் இயக்கப்படவில்லை. அந்த பேருந்துகளை எதிர்பார்த்து   காத்திருந்த பயணிகள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் நேற்றும் 2வது   நாளாக பிஆர்டிசி டிரைவர்கள், நடத்துனர்கள் வேலை நிறுத்தத்தில்   ஈடுபட்டுள்ளனர். நகரப் பகுதியில் டவுன் பஸ்கள், மினி பஸ்களும் இயங்காததால் பள்ளி   செல்லும் மாணவர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். வெளியூர் பயணிகள்   மட்டுமின்றி உள்ளூர் மக்களும் பாதிப்புக்குள்ளானதால் பிஆர்டிசி நிர்வாகம்   உடனே பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென அரசியல்   கட்சிகள், அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.

 இதனிடையே   முத்தியால்பேட்டையில் பிஆர்டிசி டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக   பாதிக்கப்பட்ட பாகூர் டிரைவர் நாகராஜ் அளித்த புகாரின்பேரில் சேலியமேடு   பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் மீது போலீசார் 2 பிரிவுகளில் வழக்குபதிந்து   தேடி வருகின்றனர். இதனிடையே தாக்குதல்   சம்பவத்துக்கு நிர்வாகம் தீர்வு காணும் வரை போராட்டத்தை தொடரப் போவதாக   பிஆர்டிசி ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 8 டிரைவர், நடத்துனர்கள் டிஸ்மிஸ்

புதுச்சேரியில் தனியார் பேருந்து டிரைவர்கள், நடத்துனர்கள் டைமிங் தகராறு காரணமாக தங்களை தொடர்ந்து தாக்கி வருவதாகவும், தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக் கோரியும் பிஆர்டிசி ஒப்பந்த டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள் நேற்று 2வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் பிஆர்டிசி பேருந்துகள் எதுவும் 2வது நாளாக ஓடவில்லை. பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

ஒப்பந்த ஊழியர்களின் திடீர் போராட்டத்தால் பிஆர்டிசிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட 5 டிரைவர்கள் மற்றும் 3 நடத்துனர்கள் என மொத்தம் 8 பிஆர்டிசி ஒப்பந்த ஊழியர்கள் நிர்வாகத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பிஆர்டிசி பொது மேலாளர் (நிர்வாகம்) ஏழுமலை நேற்று வெளியிட்டுள்ளார்.

Related Stories: