கோவை திருச்சி ரோடு மேம்பாலத்தில் 40 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்த வாலிபர் பலி-வேகத்தடை அமைக்க துணை கமிஷனர் உத்தரவு

கோவை : கோவையில் புதியதாக திறக்கப்பட்ட திருச்சி ரோடு மேம்பாலத்தில் விபத்து தொடர்கிறது. நேற்று சுமார் 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த வாலிபர் இறந்தார். அங்கு வேகத்தடை அமைக்க போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹரிஹரன் (25). இவர் நேற்று காலை தனது பைக்கில் கோவை, திருச்சி மேம்பாலத்தில் சிங்காநல்லூரில் இருந்து உக்கடம் சென்றார். அப்போது, மேம்பாலத்தில் சுங்கம் வளைவில் வந்தபோது பைக் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதில், அந்த வாலிபர் மேம்பாலத்தில் சுமார் 40 அடி உயரத்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டார்.

தலை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.திருச்சி மேம்பாலம் திறந்த ஓரிரு நாட்களில் வாலிபர் ஒருவர் விபத்தில் சிக்கி பலியானார். இதனால், மேம்பாலத்தில் 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

மேலும், தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் நேற்று 2வதாக வாலிபர் ஒருவர் விபத்தில் சிக்கி பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் மதிவாணன், போக்குவரத்து உதவி கமிஷனர்கள் சரவணன், சதீஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர், துணை கமிஷனர் மதிவாணன் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மேம்பாலத்தில் விபத்துகளை தடுக்க தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க உத்தரவிட்டார். அதன்படி, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories: