ஒரு வாரத்திற்கு முன்பே சீசன் துவங்கியது கைகொடுக்கும் கணவாய் மீன்கள்-கடலுக்குச் சென்ற பாம்பன் மீனவர்கள் மகிழ்ச்சி

ராமேஸ்வரம் : மன்னார் வளைகுடா கடலில் அதிகளவில் கணவாய் மீன்கள் சிக்கியதால் பாம்பன் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.தமிழக கடலில் மீன்பிடி தடைகாலம் முடிந்து கடந்த 15ம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். பாம்பன் மீனவர்களுக்கு முதல் இரண்டு நாள் அதிகளவில் மீன்கள் கிடைத்தன. மூன்றாவது முறை கடல் மீன்பாடு குறைவாக இருந்தது. வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருந்ததால் மீனவர்கள் சோர்வடைந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் இருந்து 150க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இரவு முழுவதும் மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடித்துவிட்டு நேற்று காலை கரை திரும்பினர்.

மீனவர்களின் படகில் மீன்வரத்து குறைவாக இருந்தது. அதே நேரத்தில் கணவாய் மீன்கள் அதிகளவில் சிக்கியிருந்தன. டியூப் கணவாய் என்று அழைக்கப்படும் கணவாய் மீன்கள் படகிற்கு தலா 200 கிலோ முதல் 350 கிலோ வரையில் பிடிபட்டு இருந்தது. மற்ற மீன்கள் குறைவாக இருந்தாலும், கணவாய் மீன்வரத்து அதிகளவில் இருந்ததால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கணவாய் மீன்கள் பிளாஸ்டிக் கூடைகளில் அள்ளப்பட்டு சிறிய நாட்டுப்படகுகள் மூலம் கரைக்கு கொண்டு வந்து விற்பனைக்கு அடுக்கி வைக்கப்பட்டன. வெளியூர் மொத்த வியாபாரிகள் போட்டி போட்டு விலைக்கு வாங்கி சென்றனர். நேற்று பிடித்து வரப்பட்ட கணவாய் மீன்கள் சிறிய சைஸ் ஒரு கிலோ அதிகப்பட்சமாக ரூ.150 வரையிலும், பெரிய சைஸ் ஒரு கிலோ அதிகப்பட்சமாக ரூ.230 வரையிலும் விலை போனது. வழக்கமாக மன்னார் வளைகுடா கடலில் வரும் ஜூலை மாத துவக்கத்தில்தான் டியூப் கணவாய் மீன்களின் சீசன் துவங்கும். தற்போது ஒரு வாரத்திற்கு முன்னதாகவே மீனவர்கள் வலையில் அதிகளவில் கணவாய் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: